100 விமானச் சேவைகளை ரத்து செய்ய ஏர் இந்தியா முடிவு

100 விமானச் சேவைகளை ரத்து செய்ய ஏர் இந்தியா முடிவு

1 mins read
e46a4f13-c7d0-411a-96e4-d366d0dd63f1
ஜூன் மாதம் முதல் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய வழித்தடங்களில் ஏர் இந்தியா, விமானச் சேவைகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - கோப்புப் படம்

புதுடெல்லி: அனைத்துலக அளவில் விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், ஏர் இந்தியா நிறுவனம் தனது அன்றாட விமானச் சேவைகளில் கிட்டத்தட்ட 100 சேவைகளை குறைக்கத் திட்டமிட்டுள்ளது.

தற்போது நாள் ஒன்றுக்கு 1,100 விமானங்களை இயக்கி வரும் நிலையில், ஜூன் மாதம் முதல் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய வழித்தடங்களில் விமானச் சேவைகளை ஏர் இந்தியா குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை (மே 1) அன்று அனைத்துலக விமானங்களுக்கான எரிபொருள் விலை 5.33 விழுக்காடு உயர்த்தப்பட்டு, ஒரு கிலோ லிட்டர் 1,511.86 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் 99.40 டாலராக இருந்த ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 179 டாலர் வரை உயர்ந்துள்ளது.

ஒரு விமான நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டுச் செலவில் எரிபொருள் செலவு மட்டுமே 40 விழுக்காடுவரை இருப்பதால், இந்த விலை உயர்வு நிறுவனத்தின் லாபத்தை வெகுவாகப் பாதித்துள்ளது.

குறிப்பாக, இந்திய விமானங்களுக்குப் பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடிவிட்டதால் ஐரோப்பா, அமெரிக்கா செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. ஏற்கெனவே ரூ.20,000 கோடிக்கும் மேல் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா, நிதி நிலைமையைச் சீராக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்