புதுடெல்லி: அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு தொடர்பாக இந்தியாவுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி புதிய வரிகள் அமலுக்கு வரும் நிலையில், இந்தோனீசியாவுடனான நல்லதொரு வரி ஒப்பந்தம் சாத்தியமானதையடுத்து, இந்தியச் சந்தைகளிலும் அமெரிக்கா நுழைய முடியும் என நம்புகிறது.
இந்தியச் சந்தைகளில் நுழைவதற்காக மேற்கொண்ட முயற்சிகளில் அமெரிக்கா குறிப்பிட்டத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அதிபர் டிரம்ப், தனது வலுவான வரிவிதிப்பு உத்தியே இதற்கு முக்கியமான காரணம் என்று செவ்வாய்க்கிழமை (ஜுலை 15) கூறினார்.
வரிவிதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போது விவசாயம் சார்ந்த அமெரிக்காவின் பரிந்துரைகளை ஏற்கவும் தனது நிபந்தனைகளைத் தளர்த்தவும் இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
இதனால் ஜூலை 9ஆம் தேதிக்குள் இருதரப்புக்கும் இடையே இடைக்கால ஒப்பந்தம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது.
இந்நிலையில், இந்தோனீசியாவுடன் ஏற்பட்டுள்ள உடன்படிக்கை காரணமாக அந்நாட்டின் சந்தைக்குள் அமெரிக்கா நுழைய உள்ளது என்றும் இதே அடிப்படையில்தான் இந்தியாவுடனான பேச்சுவார்த்தை நடக்கிறது என்றும் திரு டிரம்ப் கூறினார்.
“இந்தியச் சந்தைகளை நாம் அணுகப் போகிறோம். இந்த நாடுகளை அணுகுவதற்கான சாத்தியம் முன்பு நமக்கு இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இப்போது வரிவிதிப்பு தொடர்பாக நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் நமக்கான இந்த அணுகலை, வாய்ப்பைப் பெறுவதற்குக் காரணம்,” என செய்தியாளர்களிடம் பேசும்போது அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் மட்டும் ஜகார்த்தாவில் இருந்து 20 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான செம்பு அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவின் முக்கிய வர்த்தகப் பங்காளியான இந்தியா, அமெரிக்காவுடன் இன்னும் வரிகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஜூன் மாத இறுதிக்குள் இது முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
பால்வளத்துறையில் அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இந்தியா திட்டவட்டமாக மறுத்துவருகிறது. இத்துறையில் 80 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறு விவசாயிகள் ஆவர்.
இந்நிலையில், சில இறுதி விவரங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்தியாவுடனான ஒப்பந்தம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.
தற்போது, ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்தியாவின் வர்த்தகக் குழு, அமெரிக்கத் தரப்புடனான பேச்சுவார்த்தைக்காக வாஷிங்டனில் உள்ளது.
இந்தியாவையும் உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பிலுள்ள நாடுகளுக்கு 10% வரி விதிக்கப்படும் என திரு டிரம்ப் அண்மையில் எச்சரித்திருந்தார்.
மேலும் ரஷ்ய எண்ணெய்யைத் தொடர்ந்து வாங்கும் நாடுகள் மீது இரண்டாம் நிலை தடைகளை விதிக்கும் திட்டம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ரஷ்யாவிற்கு உதவும் நாடுகள் மீது 500% வரை வரிகளை விதிக்க டிரம்ப்பிற்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை அமெரிக்க செனட்டர்கள் பலர் ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது.
ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு புதைபடிவ எரிபொருள்களை வாங்கும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.