அமெரிக்காவின் வரி எதிரொலி: சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 33% அதிரடி உயர்வு

1 mins read
9792e8ff-21c4-41d7-9ea9-6b7c44013a57
நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 33 விழுக்காடு அதிகரித்துள்ளது. - படம்: தினத்தந்தி

புதுடெல்லி: இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதிப்பதால், ஏற்றுமதிக்கு வேறு நாடுகளை இந்தியா நாடத் தொடங்கி உள்ளது.

அதன்படி, இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி சந்தையாக சீனா உருவெடுத்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் சீனாவுக்கான ஏற்றுமதி 33 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளைத் தண்டிக்கும் விதத்தில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இதன் முதற்கட்டமாக இந்தியப் பொருள்கள்மீது 25 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது.

தற்போது இதன் அடுத்தகட்டமாக, ரஷ்யாவுடனான வர்த்தகத்தைத் துண்டிக்க வலியுறுத்தி இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு 500 விழுக்காடு வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

புதிய சந்தையைத் தேடும் இந்தியா

அமெரிக்காவின் இந்த அதிரடி வரி உயர்வால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அமெரிக்காவிற்கு மாற்றாக மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதியை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.

அவ்வகையில், இந்தியாவின் அண்டை நாடான சீனாவுடனான வர்த்தகம் பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் சீனாவுக்கான ஏற்றுமதி 1,222 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தைவிட 33 விழுக்காடு அதிகமாகும்.

இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் செல்லும் பொருட்களில் குறிப்பாக எண்ணெய் உணவுப்பொருட்கள், கடல்சார் தயாரிப்புகள், தொலைத்தொடர்புச் சாதனங்கள், மசாலாப் பொருள்களின் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்