டேராடூன்: உத்தராகண்டில் பலத்த மழை பெய்கிறது. சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) மீண்டும் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, பெண் ஒருவர் பலியாகிவிட்டதாகவும் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில்தான் உத்தராகண்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்ததுடன், பெரும் சேதங்களும் ஏற்பட்டன. இந்தப் பாதிப்பில் இருந்தே அம்மாநில மக்கள் இன்னும் மீளாத நிலையில், மீண்டும் பெரு மழையும் நிலச்சரிவும் அங்குள்ள சாமோலி மாவட்டத்தை புரட்டிப்போட்டுள்ளது.
அம்மாவட்டத்தில் உள்ள தாராலி உள்ளிட்ட சில பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை திடீர் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது.
இதில் ஏராளமான குடியிருப்புகள், கட்டடங்களை மழைநீர் சூழ்ந்தது. மேலும், பல கட்டடங்கள் மண்ணில் புதைந்தன. வாகனங்கள் மண் சரிவில் சிக்கி சேதமடைந்ததாகவும் பலத்த மழை காரணமாக போக்குவரத்து நிலைகுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மண் சரிவு காரணமாக, தாராலி பகுதி குப்பைமேடு போல் காட்சியளிப்பதாகக் கூறப்படுகிறது.
கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மேக வெடிப்பை அடுத்து, ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
சாக்வாரா என்ற கிராமத்தில் மண் சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளில் பெண் ஒருவர் சிக்கி பலியான நிலையில், மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புக் குழுவினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மிங்கதேரா அருகே தாராலி-குவால்டம் சாலை மூடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, உத்தராகண்ட் மாநிலத்திற்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையை வெளியிட்டது.
தெஹரி, டேராடூன், சாமோலி, ருத்ரபிரயாக், நைனிடால், அல்மோரா ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.