மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கும் என்பதால் காவிரிக் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக கர்நாடகாவின் முக்கியமான நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியுள்ளன. அவற்றிலிருந்து தற்போது 70,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) மாலை நிலவரப்படி, மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 22,000 கன அடியில் இருந்து 35,000 கன அடியாக அதிகரிக்கப்படும் எனக் கூறப்பட்டது.
கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 80,000 கன அடியாக அதிகரிக்கும்பட்சத்தில், மேட்டூர் அணையின் 16 கண் பாலம் வழியாக, வினாடிக்கு 50,000 கன அடி முதல் 70,000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே, 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து, கரையோரப் பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், காவிரி வெள்ளத்தில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.