ஹைதராபாத்: செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை அதிகரிக்க ஏதுவாக, செயற்கை நுண்ணறிவு புத்தாக்க மையத்தை நிறுவியுள்ளது தெலுங்கானா அரசு.
உலகெங்கிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வேளையில், இந்தியாவின் தெலுங்கானா மாநிலமும் ‘ஏஐ’ தொடர்பான நடவடிக்கைகளை வேகப்படுத்தி உள்ளது.
வளர்ந்து வரும் அத்தொழில்நுட்பதில் வளர்ச்சி வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்திக்கொள்வதற்கான போட்டி அதிகரித்து வருகிறது. இதற்கான செயல்முறையை எளிதாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதாக அம்மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து ‘தெலுங்கானா செயற்கை நுண்ணறிவு புத்தாக்க மையத்தை (TAIH) நிறுவியுள்ளது அம்மாநில அரசு.
ஹைதராபாத்தில் இந்த மையம் அமைக்கப்பட்டதாகத் தெலுங்கானா தொழில்நுட்ப, தொழில்துறை அமைச்சர் டி.ஸ்ரீதர் பாபு தெரிவித்தார்.
மேலும், 2035ஆம் ஆண்டுக்குள் உலகின் முதல் 20 ஏஐ மையங்களில் ஒன்று தெலுங்கானா மாநிலத்தில் அமைவதை உறுதி செய்யவேண்டும் என்றும் அதற்கு ஏற்ற ஓரிடத்தைக் கண்டுபிடிப்பதை உறுதி செய்வதே ‘TAIH’ அமைப்பதன் முதன்மையான குறிக்கோள் என்றும் அவர் கூறினார்.
இந்த மையம் பல துறைகளில் AI அடிப்படையிலான புத்தாக்க, ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான மையப்புள்ளியாக செயல்படும்.
“ஏஐ ஆராய்ச்சி, புதுமையான முயற்சிகள் ஆகியவற்றுக்கு ஏற்ற இடமாக தெலுங்கானாவை வளர்த்தெடுப்பதில் அரசு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது. ஏனெனில் எதிர்காலம் என்பது செயற்கை நுண்ணறிவுக்குச் சொந்தமானது,” என்றார் அமைச்சர் ஸ்ரீதர் பாபு.
தொடர்புடைய செய்திகள்
“இந்தியாவில் ‘ஏஐ’ குறித்து பொதுமக்கள் நினைக்கும்போது முதலில் நினைவுக்கு வரும் பெயராக தெலுங்கானாவை மாற்றுவோம். விரிவான ‘ஏஐ’ சுற்றுச்சூழல் அமைப்பை அரசாங்கம் உருவாக்கி வருகிறது.
“கூகல், மைக்ரோசாப்ட், இன்ஃபோசிஸ் மற்றும் அமேசான் உள்ளிட்ட உலகளாவிய தொழில்நுட்பத் தலைவர்களுடன் இணைந்து, ஐஐடி, பிட்ஸ் பிலானி, ஐஎஸ்பி, நல்சார், ஐஐடி ஹைதராபாத் மற்றும் சி-டாக் போன்ற முன்னணி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் அரசாங்கம் உத்திபூர்வ பங்காளித்துவத்தை உருவாக்கியுள்ளது,” என்றார் அமைச்சர் பாபு.

