புதுடெல்லி: அருணாசலப் பிரதேசத்தில் அமையவிருக்கும் நீர்மின் அணைத் திட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியது.
போராட்டக்காரர்கள் காவல்நிலையத்தையும் பல்வேறு கட்டடங்களையும் தீயிட்டுச் சேதப்படுத்தினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசுக்குச் சொந்தமான என்எச்பிசி நிறுவனத்தின் 11,200 மெகாவாட் திட்டத்திற்கு எதிராகவே அக்டோபர் 23ஆம் தேதியன்று வன்முறை வெடித்தது.
போராட்டக்காரர்கள் வீசிய கற்களால் ஏறத்தாழ 40 காவல்துறையினர் காயமுற்றனர். கூட்டத்தைக் கலைக்கக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.
இதனையடுத்து, வன்முறையைக் கைவிட்டு அரசுடன் கலந்துரையாடலில் ஈடுபடுமாறு எதிர்ப்பாளர்களுக்கு முதலமைச்சர் பேமா காண்டு அழைப்பு விடுத்துள்ளார்.
சீனாவின் பிரம்மாண்ட அணைத் திட்டத்திற்குப் பதிலடியாகவே இந்த அணை கட்டப்படுவதாக இந்தியா கூறுகிறது.
சீனாவின் திட்டத்தால் நதி நீரோட்டம் பாதிக்கப்படலாம் எனப் புதுடெல்லி அஞ்சுகிறது.
பிரம்மபுத்திரா ஆற்றில் நீர்வரத்தைச் சீராக வைத்திருக்கப் பெரிய நீர்த்தேக்கம் தேவை என்று இந்தியா வாதிடுகிறது.
ஆனால், இதனால் எந்தப் பாதிப்பும் நேராது என்று சீனா திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
தங்களின் நிலங்களையும் வீடுகளையும் இழக்க நேரிடும் என்று அஞ்சி உள்ளூர் மக்கள் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
இருநாட்டுப் படைகளுக்கும் இடையே அண்மையில் எல்லைப் பகுதியில் மோதல் நிகழ்ந்தது.
“பதற்றத்தைத் தணிக்க ஏற்கெனவே உள்ள தூதரக, ராணுவ வழிமுறைகள் தொடர்ந்து பயன்படுத்தப்படும்,” என்று வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் தெரிவித்துள்ளார்.
