‘நாடுகடத்தப்பட கோரிக்கை விடுங்கள்’: ‌ஹசினாவுக்கு பங்ளாதே‌‌ஷின் சவால்

‘நாடுகடத்தப்பட கோரிக்கை விடுங்கள்’: ‌ஹசினாவுக்கு பங்ளாதே‌‌ஷின் சவால்

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

09 Nov 2026 - 9:01 pm

2 mins read

டாக்கா: உண்மையிலேயே நாடு திரும்பும் எண்ணம் இருந்தால் தம்மை இந்தியாவிலிருந்து நாடுகடத்தக் கோரிக்கை விடுக்குமாறு தங்கள் முன்னாள் பிரதமர் ‌ஷேக் ஹசினாவுக்கு பங்ளாதே‌ஷ் சவால் விடுத்துள்ளது.

தமது கடப்பிதழைப் புதுப்பிக்க திருவாட்டி ஹசினா விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பம் ஆய்வு செய்யப்பட்டுவரும் நிலையில் பங்ளாதே‌ஷ் சவால் விடுத்திருக்கிறது.

கவிழ்ந்த ஆட்சி

15 ஆண்டுகளாக பங்ளாதே‌ஷ் பிரதமராகப் பொறுப்பு வகித்த திருவாட்டி ஹசினாவின் ஆட்சி பெரிய அளவில் எழுந்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாகக் கவிழ்ந்தது. 2024ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க அவர் நடவடிக்கை எடுத்ததன் தொடர்பில் மனித உரிமைகளுக்கு எதிராகக் குற்றம் புரிந்ததற்காக அவருக்கு பங்ளாதே‌ஷில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அதையடுத்து இந்தியா சென்ற திருவாட்டி ஹசினா வரும் டிசம்பர் மாதம் பங்ளாதே‌ஷ் திரும்பப்போவதாக உறுதியளித்திருந்தார்.

திருவாட்டி ஹசினா தமது கடப்பிதழைப் புதுப்பிக்க சமர்ப்பித்த விண்ணப்பத்தை அதிகாரிகள் ஆராய்ந்துவருவதாக பங்ளாதே‌ஷ் உள்துறை அமைச்சர் சலாஹுதீன் அகமது திங்கட்கிழமை (நவம்பர் 9) செய்தியாளர்களிடம் கூறினார். திருவாட்டி ஹசினா, வெளிநாட்டில் தஞ்சம் நாடிய குற்றவாளி என்றும் அவர் குறிப்பிட்டார்.

“சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு விண்ணப்பம் இடம்பெற்றதா, கடப்பிதழுக்கு விண்ணப்பிக்க அவருக்கு உரிமை உள்ளதா போன்ற சட்டரீதியான அம்சங்கள் பரிசீலிக்கப்பட்டுவருகின்றன,” என்று சலாஹுதீன் அகமது சொன்னார்.

“சரியான நடைமுறைகள் வாயிலாக அவரை நாடுகடத்த அந்த நாட்டுக்கு (இந்தியா) ஏற்கெனவே கடிதம் அனுப்பிவிட்டோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

கடப்பிதழுக்கு விண்ணப்பம்

தாம் நாடு திரும்ப முன்னதாகத் திங்கட்கிழமை திருவாட்டி ஹசினா புதிய கடப்பிதழுக்கும் அடையாள அட்டைக்கும் விண்ணப்பித்திருந்தார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பார்த்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் இந்தியாவுக்குத் தப்பியோடியதிலிருந்து முதன்முறையாக இவ்வாறு பங்ளாதே‌ஷ் அரசாங்கத்தைத் தொடர்புகொண்டார்.

ஆனால், அவரின் விண்ணப்பத்தை பங்ளாதே‌ஷ் அரசாங்கம் விரைவில் மறுத்தது.

இந்த விண்ணப்பங்கள், திருவாட்டி ஹசினா டிசம்பரில் நாடு திரும்ப விரும்புவதை இதுவரை இல்லாத அளவு தெள்ளத் தெளிவாகக் காட்டுவதாகக் கருதப்படுகின்றன. இதைத் தொடர்ந்து பங்ளாதே‌ஷில் புதிதாக அரசியல், சட்டரீதியான பதற்றம் தலைதூக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

திருவாட்டி ஹசினாவின் கட்சி பங்ளாதே‌ஷில் தடைசெய்யப்பட்டிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்