‘பாரத் உச்சநிலை மாநாடு’ வெளிநாட்டுப் பேச்சாளர்கள் 115 பேருக்குத் தடை: சசி தரூர் கண்டனம்

‘பாரத் உச்சநிலை மாநாடு’ வெளிநாட்டுப் பேச்சாளர்கள் 115 பேருக்குத் தடை: சசி தரூர் கண்டனம்

படம்: டைம்ஸ்நவ்

14 Nov 2026 - 2:02 pm

1 mins read

ஹைதராபாத்: ‘பாரத் உச்சநிலை மாநாடு 2026’இல் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவு அமைச்சால் அனுமதிக்கப்பட்ட 315 பேச்சாளர்களில் 115 பேருக்கு இந்தியாவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் குற்றம் சாட்டியுள்ளார்.

உள்துறை அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சசி தரூர், இம்முடிவின் சட்டபூர்வ அடிப்படை குறித்து மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

மாநாடு சனிக்கிழமை (நவம்பர் 14) முடிவடையவுள்ள நிலையில், இத்தகைய கடுமையான நடவடிக்கையை எடுப்பதற்கு எந்தச் சட்டப் பிரிவு பயன்படுத்தப்பட்டது என்பது தெளிவாக இல்லை எனவும், விமர்சனக் குரல்களை நசுக்க முற்படுவது பெருமைமிகு ஜனநாயகத்திற்கு அழகல்ல எனவும் அவர் தமது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் நவம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த இரண்டு நாள் அனைத்துலக மாநாட்டில், சுமார் 70 நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட கொள்கை வகுப்பாளர்கள், முற்போக்குத் தலைவர்கள், அறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

இதனிடையே, காங்கிரஸ் தலைவர் குர்தீப் சிங் சப்பால் கூறுகையில், இது வெறும் காங்கிரஸ் கட்சியின் நிகழ்வு அல்ல என்றும், தெலுங்கானா அரசாங்கத்தால் மாநிலத்தின் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்க நடத்தப்படும் அனைத்துலக முயற்சி என்றும் அவர் விளக்கமளித்தார்.

குறிப்புச் சொற்கள்