ஜபல்பூர்: மத்தியப் பிரதேச மாநிலம், பர்கி அணையில் நிகழ்ந்த படகு விபத்தில் மாயமான கடைசி இருவரின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 3) மீட்கப்பட்டன.
இதனுடன் இந்தக் கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.
ஞாயிறு காலை 5 வயதுச் சிறுவன், அவனது மாமா காம்ராஜ் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த நான்கு நாள்களாக நடைபெற்றுவந்த தேடுதல் பணி நிறைவடைந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை மாலை பலத்த புயல் காரணமாக, சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான 20 ஆண்டுகள் பழமையான படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
படகில் இருந்த 41 பயணிகளில் 28 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராணுவ வீரர்களும் பேரிடர் மீட்புப் படையினரும் இணைந்து இந்த மீட்புப் பணியை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாகப் படகு ஊழியர்கள் மூவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மாநிலம் முழுவதும் இதுபோன்ற பழைய படகுகளை இயக்கத் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

