புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலிருந்து வாரணாசிக்குக் கிளம்பிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்திற்கு செவ்வாய்க்கிழமை (மே 28) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அதிலிருந்த 176 பயணிகளும் வெளியேற்றப்பட்டதாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.
அந்த விமானம் தனிப்பட்ட ஓர் இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டதாகவும் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பிரிவினரும் வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்யும் வல்லுநர் குழுவும் பணியில் ஈடுபட்டதாகவும் டெல்லி விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறினார்.
‘பிடிஐ’ செய்தி நிறுவனம் பதிவேற்றிய காணொளியில், இண்டிகோ விமானத்தின் அவசரகாலக் கதவு வழியாகப் பயணிகள் வெளியேற்றப்படுவதைக் காண முடிந்தது.
“டெல்லியிலிருந்து வாரணாசி செல்லும் இண்டிகோ விமானம் 6இ2211க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பயணிகளை வெளியேற்றியபின் அந்த விமானம் தனி இடத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு சோதிக்கப்படுகிறது. பாதுகாப்புச் சோதனைகள் நிறைவடைந்த பிறகு, விமானம் மீண்டும் விமான நிலைய முனைத்திற்குக் கொண்டுசெல்லப்படும்,” என்று இண்டிகோ விமான நிறுவனம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.35 மணியளவில் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகத் தகவல் கிடைத்தது என்று டெல்லி தீயணைப்புப் படை கூறியது.
அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக டெல்லி விமான நிலைய அதிகாரிகள் உறுதிசெய்தனர்.
அதிகாரிகள் சோதனையிட்டதில் அந்த மிரட்டல் போலியானது என்று தெரியவந்துள்ளது.
முன்னதாக, விமானத்தின் கழிவறையில் ‘இன்னும் 30 நிமிடங்களில் குண்டு வெடிக்கும்’ என்று எழுதப்பட்ட மெல்லிழைத்தாள் (டிஷ்யூ) காணப்பட்டதாகக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மிரட்டல் செய்தி போலியானது என்று உறுதியான பிறகு, காலை 11.10 மணியளவில் டெல்லியிலிருந்து அவ்விமானம் வாரணாசிக்குக் கிளம்பிச் சென்றதாக இண்டிகோ நிறுவனத்தை மேற்கோள்காட்டி என்டிடிவி இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.