எல்லையைப் பகிரவில்லை: சீனாவுக்கு அருணாச்சல் முதல்வர் பதிலடி

எல்லையைப் பகிரவில்லை: சீனாவுக்கு அருணாச்சல் முதல்வர் பதிலடி

2 mins read
5737f0a4-abbc-4619-afa1-243947679e50
முதல்வர் பெமா காண்டு. - படம்: ஊடகம்

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசம், சீனாவுடன் இணைந்த பகுதியல்ல என்றும் திபெத்துடன் மட்டுமே இந்தியா தனது எல்லையைப் பகிர்ந்துகொண்டுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் பெமா காண்டு தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் தனது எல்லையை இந்தியா பகிர்ந்துகொள்ளவில்லை என அவர் மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தை தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியாக அறிவித்து சொந்தம் கொண்டாடி வருகிறது சீனா.

மேலும், அவ்வப்போது அருணாச்சலப் பிரதேசத்துக்குள் சீன ராணுவம் ஊடுருவ முயற்சி மேற்கொள்வதும், இந்தியத் தரப்பு அதற்குப் பதிலடி கொடுப்பதும் வழக்கமாகிவிட்டது.

இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த எல்லைப் பிரச்சினை நீண்ட காலமாக நிலவி வரும் சூழலில், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பல பகுதிகளின் பெயர்களை சீன மொழியில் மாற்றி அமைத்துள்ளது அந்நாடு. மேலும், அருணாச்சல் எல்லையில் சீன குடியிருப்புகளையும் அமைத்து வருகிறது.

பத்து கிராமங்களை சீனா அமைத்துள்ளதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியாகி, அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளின் பெயர்களை சீனா அண்மையில் மாற்றியது குறித்து முதல்வர், பெமா காண்டு கருத்து தெரிவித்துள்ளார்.

“இந்தியாவின் எந்தப் பகுதியும் சீனாவுடன் நேரடியாக எல்லையைப் பகிரவில்லை. அருணாச்சல் மாநிலத்தில் மூன்று அனைத்துலக எல்லைப் பகுதிகள் உள்ளன. பூடானுடன் 150 கிமீ, மியான்மாருடன் 550 கிமீ, திபெத்துடன் 1,200 கிமீ எல்லையைப் பகிர்ந்துள்ளோம்.

“திபெத், தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், 1950ல் திபெத்தை சீனா வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்தது. எனவே இது இந்திய - திபெத் எல்லை என்றே வரலாற்று ரீதியாக அறியப்படுகிறது.

“அருணாச்சல் பகுதிகளுக்கு சீனா பெயர் மாற்றுவது புதிதல்ல. இதுவரை ஐந்து முறை இது போல் பெயர் மாற்றியுள்ளனர். சீனாவின் இந்தப் பழக்கம் எங்களுக்குத் தெரியும் என்பதால், இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இந்தப் பிரச்சினையை வெளியுறவு அமைச்சு கையாண்டு வருகிறது,” என்றார் முதல்வர் பெமா காண்டு.

சீனாவுக்கு அதன் பாணியிலேயே வார்த்தை விளையாட்டு மூலம் பெமா காண்டு பதிலடி தந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்