சென்னை: ஆந்திரா மாநிலத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே பக்கிங்ஹாம் கால்வாய் ஓடுகிறது.
சென்னையில் சிவானந்தா சாலை லாக் நகர் முதல் ஆர். ஏ. புரம் வரை ஏறத்தாழ ஏழு கி.மீட்டர் நீளத்துக்கு ரூ.31 கோடியில் பக்கிங்ஹாம் கால்வாயைச் சீரமைக்கும் பணிகளைத் தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மத்திய பக்கிங்ஹாம் கால்வாய் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மந்தைவெளி, நந்தனம், மயிலாப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து வடியும் வெள்ள நீர் கால்வாயாகவும் கூவம் நதி மற்றும் அடையாறு நதியின் மூலம் வெள்ள நீரைக் கடலுக்குக் கொண்டு செல்லும் வெள்ள நீர் வடியும் கால்வாயாகவும் செயல்படுகிறது.
இதற்கிடையே, பக்கிங்ஹாம் கால்வாயைத் தூர்வாரி சீரமைக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் சேப்பாக்கத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) தொடங்கி வைத்தனர்.
“மத்திய பக்கிங்ஹாம் கால்வாயின் நீர்த்தேக்க ஆற்றலை அதிகப்படுத்தும் வகையில், ஒரு மீட்டர் ஆழத்துக்கு அதிநவீன தூர்வாரும் இயந்திரங்களின் உதவியுடன் தூர்வாரப்படுவதன் மூலம் கால்வாயின் வெள்ள நீர் கடத்தும் ஆற்றல் வினாடிக்கு 2,500 கன அடியாக உயரும்.
“இதனால் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி. மந்தைவெளி, நந்தனம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து வெள்ள நீர் வடிந்து மத்திய பக்கிங்ஹாம் கால்வாய் மூலம் விரைவில் கடலைச் சென்றடையும்.
“மேலும், பக்கிங்ஹாம் கால்வாயின் இரு கரைகளையும் பலப்படுத்தி, மரக்கன்று நடுதல் மற்றும் நடைப்பாதை அமைத்தல், நான்கு இடங்களில் சிறுவர் பூங்காக்கள் அமைப்பது ஆகிய அழகுபடுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன,” என்று தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.