புதுடெல்லி: காவல்துறையின் சந்தேகத்துக்குரிய செயல்பாடுதான் கரூரில் 41 அப்பாவிகள் உயிரிழக்கக் காரணம் என சிபிஐ நடத்திய விசாரணையின்போது தவெக நிர்வாகிகள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கரூர் துயரச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா, கூடுதல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30), இரண்டாவது நாளாக விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தவெக முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அக்கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
சுமார் ஒன்பது மணி நேரம் நீடித்த இவ்விசாரணையின்போது இரு தரப்பினரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. அப்போது இரு தரப்பினரும் மற்றொரு தரப்பினர் மீது குற்றஞ்சாட்டியதாகக் கூறப்படுகிறது.
விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டத்துக்கு சட்டரீதியாக ஆய்வு நடத்தி அனுமதி வழங்கப்பட்டதாகவும் விதிமுறைகளுக்குப் புறம்பாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும் காவல்துறை, மாவட்ட ஆட்சியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக நிர்வாகிகளிடம் கூட்டநெரிசல் குறித்து உரிய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை என்று காவல்துறை குற்றஞ்சாட்டியதாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
ஆனால், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும், காவல்துறையினரின் சந்தேகத்துக்[Ϟ]குரிய நடவடிக்கைகளால்தான் 41 பேர் உயிரிழக்கக் காரணம் என தவெக நிர்வாகிகள் சாடியுள்ளனர்.
காவல்துறையின் அலட்சியமான செயல்பாடு குறித்து விவரிக்கும் சில காணொளிகளையும் அவர்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஆதாரங்களாக ஒப்படைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

