ஹைதராபாத்: தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இன்று இந்தித் திணிப்புக்கும், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கும் எதிராகக் கடுமையான எதிர்ப்புக் குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டுள்ளன. மும்மொழிக் கொள்கையைத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் செயல் என்று அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன.
அதையடுத்து, மத்திய பாஜக அரசு, தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழித் திட்டத்திற்கு, தங்களது மாநில பாஜக தலைவர்களின் மூலம் ஆதரவு திரட்டிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மும்மொழி அல்ல பத்து மொழிகளை ஆந்திரப் பிரதேச பல்கலைக்கழகங்களில் ஊக்குவிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட திராவிட மொழிகள் உலகளவில் புகழ்பெற்ற மொழிகள். அதே, வட இந்திய மக்களுடன் எளிதில் பழகுவதற்கு இந்தியையும் கற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
“ஆந்திரத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஐந்து முதல் பத்து மொழிகளை நான் ஊக்குவிக்கப் போகிறேன். மூன்று மொழிகள் அல்ல, பல மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன். அதனைப் படித்து மாணவர்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று பயன்பெற வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது. அதனால் விதிமுறைகளின்படி எங்களால் நிதி ஒதுக்க முடியாது,” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்மொழிக் கொள்கையில் இணைந்தால்தான் கல்விநிதி அளிக்கப்படும் என்ற அவரது கருத்துகளுக்கு எதிராக தமிழகத்தின் அரசியல் தலைவர்களும் மொழி ஆர்வலர்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.