எல்லையில் சீனா தாக்குதல்: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்

எல்லையில் சீனா தாக்குதல்: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்

படம்: என்டிடிவி

24 Oct 2026 - 5:36 pm

2 mins read

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதிகளில் இந்திய, சீனப் படைகளுக்கு இடையே அவ்வப்போது சச்சரவுகள் ஏற்பட்டாலும், எல்லைச் சூழல் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு குறித்த இருதரப்புப் புரிதலில் உள்ள வேறுபாடுகளால் இப்பிரச்சினை எழுகிறது. எனினும், இருநாட்டுப் படைகளிடையே எவ்வித வன்முறை மோதல்களும் நிகழவில்லை. கூட்டங்கள், அவசரத் தொலைபேசி தொடர்புகள் வழி களத் தளபதிகள் அமைதியைக் கட்டுக் கோப்புடன் பராமரித்து வருவதாகவும் தற்காப்புத் துறை வட்டாரங்கள் விளக்கமளித்தன.

அருணாச்சலப் பிரதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சீனப் படைகளுடன் கடந்த சில நாள்களாகப் பல்வேறு இடங்களில் நேருக்கு நேர் உரசல்கள் நீடித்து வருவதாக இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் சத்ருஜீத் சிங் கபூர் வியாழக்கிழமை (அக்டோபர் 22) பேசியிருந்தார்.

ராஜஸ்தானில் உள்ள படைத் தளத்தில் பேசிய அவர், புதிதாக உருவாக்கப்பட்ட ‘ஷௌர்யா’ கமாண்டோ பிரிவினர் இந்த மோதல் நிலவரங்களின்போது தங்களின் சிறப்புத் திறன்களை வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.

அவர் உரையை மேற்கோள் காட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட பதிவில், கல்வான், டோக்லாம் மோதல்களுக்குப் பிறகும் எல்லையில் சீனா ஊடுருவி வருவதாகவும், ஜூலை மாதத்திலிருந்து நடக்கும் மோதல் நிலவரங்களை அரசு மூடி மறைப்பதாகவும் சாடியுள்ளார்.

சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை $112.16 பில்லியனாக அதிகரித்துள்ள நிலையில், ‘மேக் இன் இந்தியா’ திட்டம் ‘சீனாவிலிருந்து இறக்குமதி செய்’ என்றாகிவிட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சீனாவின் எல்லை அத்துமீறல்கள் குறித்துப் பிரதமர் தொடர்ந்து மௌனம் காப்பதாகக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா உள்ளிட்டோரும் குற்றஞ்சாட்டினர்.

காங்கிரசின் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இந்திய ராணுவம், எல்லைச் சூழல் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் சீராக உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் பதிலளித்துள்ளது.

முன்னதாகப் பேசிய தற்காப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி, இந்தியா-சீனா எல்லைச் சூழல் தற்போது சீராக உள்ளதாகவும், பேச்சுவார்த்தைகள் மூலமாகவே சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆளில்லா வானூர்தி போன்ற நவீன தொழில்நுட்பத் தற்காப்பு வசதிகளுடன் இந்தியப் படைகள் எல்லைகளில் தொடர்ந்து விழிப்புடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

எல்லைப் பிரச்சினைகளுக்கு அரசு ரீதியான, ராணுவ ரீதியான தூதரகப் பேச்சுவார்த்தைகள் மூலமாகவே அமைதிக்கான தீர்வு காணப்பட்டு வருவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்