சீன அதிபர் வருகைக்குமுன் இந்தியாவில் அதிகரிக்கும் சீன முதலீடு

சீன அதிபர் வருகைக்குமுன் இந்தியாவில் அதிகரிக்கும் சீன முதலீடு

2 mins read
சீனாவுடன் அதிகரிக்கும் எல்லைப் பேச்சுவார்த்தை
58f1884c-0567-42b2-bdf8-6a2b28235ffb
சீன அதிபர் ஸி ஜின்பிங், பெரிய தூதுக் குழுவுடன் செப்டம்பரில் டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி ஷங்காய் உச்சநிலை மாநாட்டில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் மோடியும் சந்தித்தனர். - கோப்புப்படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

புதுடெல்லி: சீன அதிபர் ஸி ஜின்பிங் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா செல்லவிருக்கிறார்.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க 400 அதிகாரிகளுடன் அவர் செல்லக்கூடும் என்று இந்திய ஊடகங்கள் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) செய்தி வெளியிட்டுள்ளன.

சீன அதிபரின் இந்தியப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்துலக உறவிலும் வணிகக் கட்டமைப்பிலும் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லைப் பேச்சுவார்த்தைக்காகவும், அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சசிலை மாநாட்டில் ஸி ஜின்பிங் பங்கேற்பதை உறுதிசெய்யவும் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெய்ஜிங் சென்றுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் சீரடைந்துவரும் சூழலில், அனைத்துலக முதலீட்டுச் சந்தையிலும் நேர்மறையான மாற்றங்கள் நிகழத் தொடங்கியுள்ளன.

கடந்த 2020ஆம் ஆண்டு எல்லை மோதலுக்குப் பிறகு சீன முதலீடுகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைக் கடந்த மே மாதம் இந்திய அரசு தளர்த்தியது.

அதன் விளைவாக, திருத்தப்பட்ட விதிகளின்கீழ் 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவிற்குள் வந்துள்ளன.

தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, உற்பத்தி, மருந்துத் துறை உள்ளிட்ட பல துறைகளில் ரூ. 4,900 கோடி வரையிலான முதலீடு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதில், சீன நிறுவனங்களுக்கு முழுமையான உரிமைகளை வழங்குவதற்குப் பதிலாக, இந்திய நிறுவனங்கள் பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கும். தொழில்நுட்பம், உற்பத்தி அறிவைப் பெற சீன நிறுவனங்களைச் சிறுபான்மைப் பங்காளிகளாகச் சேர்க்கும் இந்தப் புதிய நடைமுறையை இந்தியா ஊக்குவிக்கிறது.

இந்தியாவும் சீனாவும் 3,488 கிலோமீட்டர் தொலைவு எல்லையை பகிர்ந்துகொண்டுள்ளன. லடாக், உத்தராகண்ட், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் இரு நாடுகள் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டுவரும் நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நிலவும் அமைதி இருதரப்பு உறவை நிர்ணயிக்கும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.

அதே வேளையில், நேரடி விமானச் சேவைகள், வணிகப் பயணங்கள், எல்லை வணிகம் ஆகியவற்றை மீண்டும் தொடங்கி, உறவுகளை இயல்புநிலைக்குக் கொண்டுவரும் முயற்சிகள் தீவிரமடைந்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்