புதுடெல்லி: தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான ஆட்சி அமையும் என்றும் அதில் பாஜக அங்கம் வகிக்கும் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் போட்டியிடுகிறோம் என்றும் அதிமுகவில் இருந்துதான் முதல் அமைச்சர் தேர்வு செய்யப்படுவார் என்றும் மத்திய உள்துறை அமைச்சருமான அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களைப் பாஜக ஒருங்கிணைக்கவில்லை என்றும் அது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்றும் அண்மைய ஊடகப் பேட்டி ஒன்றில் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
விஜய் தலைமையிலான தவெகவுடன் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “சில காலம் காத்திருங்கள், அனைத்தும் தெளிவாகும்,” என்று கூறியுள்ளார்.
திமுகவில் உதயநிதியை முன்னிலைப்படுத்துவதால் உட்கட்சி பூசல்கள் வெடித்துள்ளதாகவும் திமுகவினரின் ஊழல், மோசமடைந்த சட்டம், ஒழுங்கு ஆகியவற்றில் இருந்து தமிழக மக்களின் கவனத்தை திசைதிருப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் திரு அமித்ஷா குற்றஞ்சாட்டி உள்ளார்.
“இல்லாத தகவல்களைச் சொல்லி, தொகுதி மறுவரையறை நடவடிக்கையைப் பெரிதாக்குகின்றனர். உண்மையிலேயே தொகுதி வரையறையைச் செயல்படுத்தும்போது தமிழகத்துக்கு எந்த அநீதியும் நடக்காது எனவும் அனைவரிடமும் ஆலோசனை நடத்தப்படும் எனவும் ஏற்கெனவே நான் தமிழகத்துக்கு வந்த போது தமிழக மண்ணில் வைத்து உறுதியளித்தேன்.
“மேலும், மோடி அரசு தமிழகத்துக்கு உரிய நிதியைத் தரவில்லை என்றும் திமுக தரப்பு கூப்பாடு போடுகிறது. உண்மையில் 2014க்கு முந்தைய 10 ஆண்டுகளில் காங்கிரசுடன் திமுகவும் அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மொத்தம் 1.53 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே தமிழகத்திற்கு நிதியாக வழங்கப்பட்டது.
“ஆனால், பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 5.48 லட்சம் கோடி ரூபாய் வழங்கி உள்ளது. இது அவர்கள் வழங்கியதைவிட மூன்றரை மடங்கு அதிகம்.
தொடர்புடைய செய்திகள்
“இது தவிர உட்கட்டமைப்பு உட்பட பல்வேறு திட்டங்களுக்காகத் தமிழகத்துக்கு மத்திய அரசு செலவிட்டிருக்கிறது,” என்றார் அமித்ஷா.