சென்னை: கேரள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்ற விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அது சென்னையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கடும் காற்றழுத்தம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. விமான அதிர்வும் (டர்புலன்ஸ்) ஏற்பட்டது.
இதனால் விமானத்தில் சமிக்ஞை அமைப்பில் பழுது ஏற்பட்டதாகவும் இதே நிலையில் நீண்ட தூரம் விமானத்தை இயக்க முடியாத காரணத்தால் அதைத் திருப்புவதாகவும் விமானி அறிவித்தார்.
சென்னையை நெருங்கிய பின்னர், அந்த விமானம் ஏறக்குறைய இரண்டு மணிநேரம் வானில் வட்டமடித்தது. இதனால் பயணிகள் பீதியடைந்தனர். பின்னர் விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டு, விமானி அதற்குத் தயாரானர்.
ஆனால், தரையிறங்கும் வேளையில், அதே ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருப்பதாக விமானிக்குக் கடைசி நேரத்தில் தெரிவிக்கப்பட்டது. விமானி சாதுர்யமாகவும் துணிச்சலாகவும் செயல்பட்டு விமானத்தை மீண்டும் மேலெழுப்பினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இரண்டாவது முயற்சியில் ஏர் இந்தியா விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. இதனால் எம்பிக்களும் மற்ற பயணிகளும் நிம்மதி அடைந்தனர்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஐந்து காங்கிரஸ் எம்பிக்களில் ஒருவரான கே.சி. வேணுகோபால், “பயங்கர அனுபவத்தை எதிர்கொண்டோம். அதிர்ஷ்டமும் விமானியின் துணிச்சலான முடிவும் பல உயிர்களைக் காப்பாற்றின,” எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையே, மோசமான வானிலையும் தொழில்நுட்பக் கோளாறும்தான் சென்னையில் விமானம் தரையிறங்கக் காரணம் என்றும் ஓடுபாதையில் இன்னொரு விமானம் நிற்கவில்லை என்றும் ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் கே.சி.வேணுகோபால், ஏர் இந்தியா நிர்வாகம் பொய் சொல்வதாகக் கூறியுள்ளார். “மற்றொரு விமானம் ஓடுபாதையில் நிற்பதை விமானிதான் அறிவித்தார். இது பற்றி விசாரணை நடத்த வேண்டும்,” என அவர் வலியுறுத்தியுள்ளார்.