லக்னோ: குண்டும் குழியுமாக, மழைநீர் தேங்கியுள்ள சாலைகளைச் சீரமைக்கக் கோரி வியாபாரி ஒருவர் மேற்கொண்ட நூதனப் போராட்டம் உத்தரப் பிரதேசத்தில் பொதுமக்கள், ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கான்பூரைச் சேர்ந்த ஷீலு துபே என்பவரின் மகள் அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறாள். அண்மையில் பெய்த மழை காரணமாக அங்குள்ள சாலையில், சிறிதும் பெரிதுமாக பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
பள்ளிக்கு சைக்கிளில் செல்லும்போது ஷீலு துபேவின் மகள் விபத்துக்குள்ளானதால் அவர் தவிப்புக்கு ஆளானார்.
இதையடுத்து, கான்பூரில் மோசமாக உள்ள சாலைகளைச் சீரமைக்கக் கோரி, மகள் விபத்துக்குள்ளாகி காயமடைந்த சாலையில் தண்ணீர் தேங்கிய குழிக்குள் படுத்துக்கொண்டு அவர் போராட்டம் நடத்தினார்.
பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் அவர்.
மோசமாக உள்ள சாலையில், சகதியுடன் கூடிய தண்ணீரில் படுத்துக்கொண்டு, அருகில் மெத்தை, தலையணையுடன் காணப்பட்ட ஷீலு துபே, ‘பாரத் மாதா கி ஜே!’ என முழக்கமிட்டார்.
அவ்வழியே பள்ளிப் பேருந்துகளில் சென்ற சிறார்களும் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க, இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களிலும் பரவியது. இதனால் அவருக்கு பொதுமக்கள் ஆதரவு கிடைத்ததுடன், கான்பூர் நகர உள்கட்டமைப்பு குறித்த விவாதங்களும் எழுந்தன.
இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சாலைகளைச் சீரமைத்தனர். மற்ற பகுதிகளிலும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
“நான் போராட்டம் நடத்திய சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. ஒரு பெரிய அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் போலிருக்கிறது,” என்று ஆவேசப்படுகிறார் ஷீலு துபே.
இதுகுறித்து கான்பூர் மேயர் பிரமீலா பாண்டே அளித்த உறுதிமொழியை ஏற்று, அவர் போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.