தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இறந்தவரின் கண்ணைக் காணவில்லை; எலி காரணம் என்கிறது மருத்துவமனை

2 mins read
acfef020-1a3a-46c5-a94e-d6f3a2542b35
கண் எங்கே போனது என்பதைக் கண்டுபிடிக்க மருத்துவமனை நிர்வாகம் சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: பீகாரில் பிரபலமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தவரின் இடது கண்ணைக் காணவில்லை. ஆடவரை இழந்த குடும்பத்திற்கு அச்சம்பவம் இரண்டாவது சோகத்தை அளித்தது.

ஃபாண்டஸ் குமார் என்பவர் அடிவயிற்றில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்த நிலையில், பாட்னாவின் இரண்டாவது பெரிய மருத்துவமனையான நாலந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த குமார், வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) இரவு 8.55 மணியளவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவரை இழந்த சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர், நள்ளிரவைத் தாண்டி சனிக்கிழமை அதிகாலை 1 மணி வரை சடலத்துடன் மருத்துவமனையில் இருந்தனர்.

பின்னர், அங்கிருந்து சென்ற குடும்பத்தினர் சில மணி நேரம் கழித்து திரும்பி வந்தபோது, இறந்த குமாரின் இடது கண்ணைக் காணவில்லை.

அதனைக் கண்டு அதிர்ச்சியும் சோகமும் அடைந்த குடும்பத்தினர், வியாபார நோக்கத்துடன் மருத்துவமனை கண்ணைத் திருடியதாகக் குற்றம் சாட்டினர்.

“இறந்தவரைச் சுட்டவருடன் கூட்டு சேர்ந்து யாராவது சதித்திட்டம் தீட்டி கண்ணைத் திருடி இருக்க வேண்டும். அல்லது வியாபாரத்திற்காக மருத்துவமனையே அவ்வாறு செய்திருக்க வேண்டும்,” என்று குமாரின் மைத்துனர் கூறினார்.

“இது குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, மருத்துவமனையில் எலி தொல்லை உள்ளது. குமாரின் கண்ணை எலி கடித்து இருக்கலாம் என்று கூறுகின்றனர்,” என்றார் அவர் வருத்தத்துடன்.

தொடர்புடைய செய்திகள்

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை, சிசிடிவி கண்காணிப்புப் படக்கருவிகளை ஆராய்ந்து வருகிறது.

மருத்துவமனை சார்பிலும் நால்வர் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. கண் சிகிச்சைப் பிரிவுத் தலைவர் தலைமையிலான அந்தக் குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்