புதுடெல்லி: இந்தியாவில் பிறப்புவிகிதம் குறைந்துவரும் நிலையில், அரசாங்கம் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று பிரதமரின் பொருளியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் தெரிவித்துள்ளார்.
குழுவின் இயக்குநர் ஆகாங்ஷா அரோரா, ஆலோசகர் விராட் சிங்குடன் இணைந்து சஞ்சீவ் சன்யால் எழுதிய ‘தி கோஸ்ட் ஆஃப் பாப்புலேஷன் பாஸ்ட்’ (The Ghost of Population Past) என்ற அறிக்கையில் இந்த முக்கியப் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் பல பகுதிகளில் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
இந்தியாவில் பிறப்புவிகிதம் 2001ஆம் ஆண்டில் ஏறத்தாழ 2.9 கோடியாக உச்சத்தில் இருந்த நிலையில், தற்போது அது 2.3 கோடிக்கும் குறைவாகச் சரிந்துள்ளது.
எனினும், இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், சராசரி ஆயுட்காலமும் மருத்துவச் வசதிகள் மேம்பட்டுள்ளதாலும் நாட்டின் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் பிறப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ளதைக் குறிப்பிட்ட சன்யால், நாட்டின் சில பகுதிகள் கிழக்கு ஆசியா, ஐரோப்பிய நாடுகளுக்கு நிகரான குறைந்த பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிறப்பு விகிதம் 1.3 ஆகவும், டெல்லியில் 1.2 ஆகவும் மிகவும் சரிந்துள்ளது. இம்மாநிலங்களில் சராசரி வயது 35ஆக உள்ளதுடன், சீனா, அமெரிக்கா போன்ற முதியவர்கள் அதிகம் வாழும் நாடுகளின் மக்கள்தொகை நிலைக்கு இவை நெருங்கி வருகின்றன.
முந்தைய காலங்களில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டக் கடுமையானக் கொள்கைகளை இன்னமும் பின்பற்றுவது பலனைத் தராது என்று சுட்டிக்காட்டிய அறிக்கை, சீனாவைப் போல இந்தியாவும் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையை எதிர்கொள்ளக்கூடும் என எச்சரித்தது.
பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த மேலும் தீவிர நடவடிக்கைகளை எடுத்தால், நாடு மிக விரைவாக முதியோர் சமுதாயமாக மாறும் ஆபத்து உள்ளதால், தற்போதைய கள நிலவரத்திற்கு ஏற்ப குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை அரசு மறுசீரமைக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
