டெல்லி வெடிப்புச் சம்பவம்: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் விசாரணை

2 mins read
25a5fee9-c958-452d-ad6e-978271c7adfb
தீவிர விசாரணை நடைபெறுவதாகவும் வெடிப்பு தொடர்பான அனைத்து விவரங்களும் கூடிய விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் திங்கட்கிழமை (நவம்பர் 10) இரவு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.

செங்கோட்டைக்கு அருகில் வெடிப்பு ஏற்பட்டதில் குறைந்தது 12 பேர் மாண்டனர்; 20 பேர் காயமுற்றனர்.

இந்திய நேரப்படி இரவு 7 மணி அளவில், செங்கோட்டைக்கு அருகில் உள்ள போக்குவரத்து சமிக்ஞை விளக்கு அருகில் நின்ற கார் வெடித்துச் சிதறியது.

வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் முக்கியத் தளங்களிலும் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்படுள்ளன.

நாடெங்கும் காவல்துறையினர் உயர் விழிப்புநிலையில் உள்ளனர்.

இதற்கிடையே, இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பாகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் விசாரணை நடைபெறும் என்று இந்திய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) தெரிவித்தனர்

பயங்கரவாதம், இந்திய இறையாண்மைக்கு மிரட்டல் விடுக்கும் செயல்பாடுகள் ஆகியவை தொடர்பாக விசாரணை நடத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது.

விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதாகவும் தற்போது எதுவும் சொல்ல முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெடிப்பு நிகழ்ந்த இடத்துக்கு அருகில் டெல்லியின் பழைய பகுதி உள்ளது.

சுற்றுப்பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் அவ்விடத்தில் உள்ள பல கடைகள் மூடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

வெடிப்பு நிகழ்ந்த இடத்தைச் சுற்றி தடுப்பு போட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தடயவியல் நிபுணர்கள் கூறினர்.

அவ்விடத்தில் மிகக் கடுமையான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் சேதமடைந்த பல வாகனங்களும் சிதைந்த உடல்களும் இருந்ததாத் தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட காரில் இருந்தவர்கள் பற்றி தகவல் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

அவர்கள் வெடிப்பில் மாண்டிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

காரின் உரிமையாளரைத் தேடுவதாக டெல்லி காவல்துறை தெரிவித்தது.

தீவிர விசாரணை நடைபெறுவதாகவும் வெடிப்பு தொடர்பான அனைத்து விவரங்களும் கூடிய விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

வெடிப்பில் மாண்டோரை அடையாளம் காண அவர்களது உறவினர்கள் லோக் நாயக் மருத்துவமனைக்கு வெளியே காத்துக்கொண்டிருந்தனர்.

இதற்கிடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) காலை பூட்டானுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டார்.

இது முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட பயணம் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்