புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் தூய்மையைப் பேணவும் பொதுமக்களின் சுகாதாரத்தை உறுதி செய்யவும் டெல்லி மாநகராட்சி நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன்தொடர்பில், கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் மொத்தம் ரூ.2.31 கோடி மதிப்புள்ள 27,915 அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
பொதுவெளியில் சிறுநீர் கழித்தல், கண்ட இடங்களில் குப்பைகளைக் கொட்டுதல், பொதுச் சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டிப் பாழாக்குதல் ஆகிய குற்றங்களுக்காகவே நான்கில் ஒரு பங்கு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை வசூலிக்கப்பட்ட 16,281 அபராதங்கள் மூலம் ரூ. 99.15 லட்சம் அபராதம் வசூலாகியுள்ளது. மேலும், 11,634 வழக்குகளுக்கான ரூ.1.32 கோடி தொகை செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.
குப்பை அல்லாத தூய்மை விதிகளின்கீழ், 24 மணி நேரத்திற்கு மேல் குப்பைகளை அகற்றாமல் வைத்திருந்ததற்காக 3,180 வழக்குகளும் கழிவுநீரைத் தெருவில் கசியவிட்டதற்காக 2,764 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புதிய திருத்தங்களின்படி, பொதுவெளியில் சிறுநீர் கழிப்பவர்களுக்கான அபராதம் ரூ. 50ல் இருந்து ரூ.500ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், செல்லப்பிராணிகளைப் பாதுகாப்பற்ற முறையில் வீதிகளில் உலவவிட்டால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
மாநகராட்சியின் சுற்றுச்சூழல் மேலாண்மைத் துறை அதிகபட்சமாக 15,961 அபராதங்களை விதித்துள்ளது. மண்டல அளவில், பழைய டெல்லிப் பகுதியில்தான் அதிகபட்சமாக 6,066 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
