600 ஆண்டு பள்ளிவாசல் இடிப்பு: வன்முறைக்கு வழிவகுத்த ‘ஏஐ’

600 ஆண்டு பள்ளிவாசல் இடிப்பு: வன்முறைக்கு வழிவகுத்த ‘ஏஐ’

படம்: தினமணி

29 Sep 2026 - 7:04 pm

1 mins read

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் அண்மையில் நடந்த வன்முறைச் சம்பவத்துக்கு செயற்கை நுண்ணறிவுதான் (ஏஐ) காரணம் எனக் கூறப்படுகிறது.

எதிர்வரும் 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சிம்ஹஸ்த கும்பமேளாவை முன்னிட்டு, உஜ்ஜைனியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 900 மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக அப்பகுதியில் அமைந்துள்ள சுமார் 635 ஆண்டுகள் பழைமையான வரலாற்றுச் சிறப்புமிக்க ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை மாற்றி அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், சிலர் இந்த வாய்ப்பைத் தவறாகப் பயன்படுத்தி, ஷாஹி மசூதி முழுமையாக இடித்துத் தரைமட்டமாக்கப்படுவது போல் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் போலிக் காணொளிகளை உருவாக்கி சமூக ஊடகங்களில் பரப்பினர்.

வதந்தியை நம்பி ஏராளமானோர் பள்ளிவாசல் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து கல்வீச்சு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின.

இதையடுத்து, காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்ததுடன், வன்முறையில் ஈடுபட்ட 15 பேரைக் கைது செய்துள்ளனர்.

மேலும், வதந்தியைப் பரப்பிய நூற்றுக்கும் மேற்பட்ட இன்ஸ்டகிராம் பக்கங்களை ஆய்வு செய்து, வன்முறைக்கு வித்திட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
மத்தியப் பிரதேசம்வதந்திபள்ளிவாசல்செயற்கை நுண்ணறிவுதொழில்நுட்பம்ஏஐபோராட்டம்கலவரம்