சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பால் இந்தியாவுக்குப் பொருளியல் நிம்மதி

2 mins read
22c8a012-142d-48e7-9a19-f2b2ca303fcc
சீனாவிடம் அதிக வர்த்தகம் செய்வதால் இந்தியாவின் மிதமிஞ்சிய வர்த்தக ஏற்றத்தாழ்வு குறையத் தொடங்கி உள்ளது. - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: சீனாவிடம் இந்தியா அதிகமான பொருள்களை விற்கத் தொடங்கி உள்ளது.

கைப்பேசி பாகங்கள் மற்றும் இதர பொருள்களின் வர்த்தக அதிகரிப்பு அதற்குக் கைகொடுத்து வருகிறது.

சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பதால், தனது முக்கிய வர்த்தகப் பங்காளியான அமெரிக்காவின் அதிகமான வரிவிதிப்பில் இருந்தும் அடுத்தடுத்து அது விடுத்து வரும் அச்சுறுத்தலில் இருந்தும் இந்தியாவுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.

சீனாவிடம் அதிக வர்த்தகம் செய்வதால் இந்தியாவின் மிதமிஞ்சிய வர்த்தக ஏற்றத்தாழ்வு குறையத் தொடங்கி உள்ளது.

இந்தியாவின் சீனாவுக்கான ஏற்றுமதி முன்னேற்றம் கண்டால் அது அந்நாட்டுக்கு ஒரு சாதகமான அறிகுறி என்று பொருளியல் பகுப்பாய்வாளர்களும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

2025 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை இந்தியப் பொருள்களின் ஏற்றுமதி 36.68 விழுக்காடு அதிகரித்து US$14.25 பில்லியனைத் (S$18.4 பில்லியன்) தொட்டது.

இது ஒரு கணிசமான அதிகரிப்புதான் என்றும் வர்த்தக ஏற்றத்தாழ்வைக் குறைக்க இன்னும் நீண்டதூரம் செல்ல வேண்டி உள்ளது என்றும் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதேநேரம், இந்தியாவின் இறக்குமதியும் கடந்த ஆண்டு அதிகரித்தது.

2024ஆம் ஆண்டு US$84.57 பில்லியனாக இருந்த இறக்குமதி, கடந்த ஆண்டு US$95.95 பில்லியனுக்கு அதிகரித்தது. இது, வர்த்தகத்துக்குச் சீனாவைச் சார்ந்திருக்கும் இந்தியாவின் போக்கு தொடருவதை காட்டுகிறது.

இதுகுறித்து கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 15) இந்திய வர்த்தகத் துறைச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கருத்துத் தெரிவித்தார்.

“சீனாவுக்கான ஏற்றுமதி வளர்வது வரவேற்கத்தக்கது. அண்மையில் சற்று மெதுவடைந்த அதன் வேகம் தற்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது,” என்றார் அவர்.

உலகளவில் விநியோகத் தொடர்கள் மறுசீரமைக்கப்படுவது சீனச் சந்தையில் இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்க உதவி வருவதாக அவர் கூறினார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா மீது 50 விழுக்காட்டு வரியை விதித்தார். தொடக்கத்தில் 25 விழுக்காட்டு வரியை அறிவித்த அவர், ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக கூடுதலாக 25 விழுக்காட்டு வரியை விதித்தார்.

வரி தொடர்பான அச்சுறுத்தலை திரு டிரம்ப் இவ்வாண்டும் தொடர்ந்தார். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு எதிராக வரி உயர்த்தப்படும் என்று இம்மாதத் தொடக்கத்தில் அவர் கூறியிருந்தார்.

அடுத்து, சீனாவின் வெளிநாட்டு முதலீடு மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தொலைத்தொடர்பு போன்ற ரகசியப் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக கவலைகள் இருந்தபோதிலும், சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டு முதலீடுகளை ஓரளவிற்கு தாராளமயமாக்குவதன் மூலம் வர்த்தகப் பற்றாக்குறைப் பிரச்சினையைச் சிறப்பாகச் சமாளிக்கலாம் என்ற சிந்தனை இந்திய அரசாங்கத்திலும் கொள்கை வட்டாரங்களிலும் நிலவுகிறது என்கின்றனர் பகுப்பாய்வாளர்கள்.

குறிப்புச் சொற்கள்