புதுடெல்லி: இந்தியாவில் மேற்கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் 47 விழுக்காட்டினர் தாய்நாட்டுக்குத் திரும்பிச் செல்வது அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேசமயம், வெளிநாடுகளில் உயர்கல்வி பெறும் இந்திய மாணவர்கள் 63 விழுக்காட்டினர் படிப்பை முடித்ததும் நாடு திரும்பாமல் படிக்கும் நாட்டிலேயே தங்கிவிடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.
‘ஸ்டடி போர்டல்ஸ்’, ‘கேம்பிரிட்ஜ் ஐஇஎல்டிஎஸ்’ அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வின் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
படிக்கும் நாட்டிலேயே தங்கி பணிபுரியும் ‘ஸ்டேயர்ஸ்’ பிரிவில் இந்தியர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இடம்பெறுவதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
அதில் இடம்பெற்றுள்ள தரவுகள், உலக அளவில் திறமைமிக்க மனிதவளத்தை ஈர்ப்பதிலும் தக்கவைத்துக் கொள்வதிலும் இந்தியா எதிர்கொள்ளும் சவால்களை அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகின்றன.
வெளிநாடுகளில் படித்துப் பட்டம் பெறும் இந்தியர்கள் மீண்டும் தாயகம் திரும்புவது, அவர்களின் அனைத்துலக அனுபவம், உயர் ஆராய்ச்சிப் பயிற்சி, உலகளாவிய தொடர்புகள் மூலம் நாட்டின் பொருளியல், தொழில் வளர்ச்சிக்குப் பெரும் ஊக்கமளிக்கும் என வல்லுநர்கள் கருதுவதாக ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
உலக அளவில் பட்டதாரித் திறமையாளர்களைத் தக்கவைப்பதில் கனடா 66 விழுக்காட்டுடன் முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா (53 விழுக்காடு), ஜெர்மனி (49%), அயர்லாந்து (45%), அமெரிக்கா (44%) என்ற விகிதத்தில் வெளிநாட்டு மாணவர்களைத் தங்களுடைய பொருளியல் பங்களிப்பாளர்களாக மாற்றுகின்றன.
2024ஆம் ஆண்டில் உலகெங்கிலும் பட்டம்பெற்ற அனைத்துலக மாணவர்கள், தங்கள் வாழ்நாளில் தாங்கள் பணியாற்றும் நாடுகளின் பொருளியலுக்கு 1.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் பங்களிப்பார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பலனை அடைகின்றன.
