புதுடெல்லி: மத்தியப் பிரதேச மாநிலத்தில் குடிசை வீடு தீப்பற்றியதால் தனது இரண்டு பேத்திகளுடன் 65 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
சிவப்புரி மாவட்டத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 21) இரவு 11.30 மணியளவில் குளிர் காய்வதற்காக மூட்டப்பட்ட தீ குடிசை மீது பட்டது.
அந்தக் குடிசையில் இருந்த ஹஜாரி பஞ்சரா, 65 என்ற முதியவரும் அவரது பேத்தி சந்தியாவும் (10) சம்பவ இடத்திலேயே மாண்டனர்.
அங்கு வந்த மீட்புக் குழுவினர் தீயை அணைத்து உயிருக்குப் போராடிய அவரது மற்றொரு பேத்தியான அனுஷ்காவை, 5, மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் அச்சிறுமியும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாண்டார்.
இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநில காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குளிர் காய்வதற்காக கொளுத்திய அடுப்பிலிருந்து பரவிய தீயினால் இப்படியொரு துயரச் சம்பவம் நிகழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச அரசாங்கம் சார்பில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது இறுதிச் சடங்கிற்கான செலவையும் அரசே ஏற்றுக் கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

