இந்தியப் பொருளியல் வளர்ச்சிக்கு பேரளவிலான கட்டமைப்புச் சீர்திருத்தம் தேவை: ஆய்வு நிறுவனம்

இந்தியாவின் வேலைவாய்ப்புகளுக்கு அதிகரித்து வரும் ஆபத்து குறித்து எச்சரிக்கை

இந்தியப் பொருளியல் வளர்ச்சிக்கு பேரளவிலான கட்டமைப்புச் சீர்திருத்தம் தேவை: ஆய்வு நிறுவனம்

2 mins read
6f069eda-dba5-4152-9291-5dbf52de9b7d
2026இல் இந்திய வளர்ச்சியில் உள்ள சவால்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு பெர்ன்ஸ்டைன் ஆய்வு நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில், செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் வேலைவாய்ப்பு இழப்பு, பலவீனமான உற்பத்தித் துறை, மானியச் சுமை குறித்து எச்சரித்துள்ளது. - படம்: பிஸினஸ் டுடே
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியப் பொருளியல் தற்போதைய வளர்ச்சியைத் தக்கவைக்க வேண்டுமானால், வேலைவாய்ப்பு, உற்பத்தித் துறையில் பெரிய அளவிலான கட்டமைப்புச் சீர்​திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என ‘பெர்ன்ஸ்டைன்’ (Bernstein) ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

உலகளாவிய பங்கு ஆய்வு நிறுவனமான பெர்ன்ஸ்டைன் இது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

உள்நாட்டு மொத்த உற்பத்தி தரவரிசையில் இந்தியா முன்னேற்றம் கண்டிருந்தாலும், உலகளாவிய விநியோகச் சங்கிலி மாறிவரும் வேளையில் மெத்தனமாக இருக்கக்கூடாது என்று அது குறிப்பிட்டது.

இந்தியாவின் சேவைகளை அடிப்படையாகக்கொண்ட வளர்ச்சி மாதிரியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதனால் தகவல் தொழில்நுட்பம், சேவை சார்ந்த துறைகளில் பணிபுரியும் 10 முதல் 15 மில்லியன் ஊழியர்கள் வேலை இழக்கும் ஆபத்தில் உள்ளனர்.

வேலை இழப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் அளவுக்கு உற்பத்தித் துறை போதுமான வேகத்தில் வளரவில்லை.

நாட்டின் பெரும்பகுதியான வேலைகள் தானியக்க முறைக்கு மாறக்கூடிய சூழலில், இந்தியா தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துபவராக மட்டுமின்றி, இந்தியா தொழில்நுட்பத்தை உருவாக்குபவராகவும் மாற வேண்டும் என்று அந்நிறுவனம் கூறியது.

வேளாண் துறையில் 45 விழுக்காடு உழைப்பாளர்கள் இருந்தும், பொருளியல் பங்களிப்பு 15 விழுக்காடாக மட்டுமே உள்ளது. இதில், கடன் தள்ளுபடிகள் தீர்வாகாது, ஆழமான சீர்திருத்தங்கள் அவசியம் என்று அது குறிப்பிட்டது.

பெட்ரோலியத் தேவையில் 88 விழுக்காடு இறக்குமதியைச் சார்ந்திருப்பது பலவீனமானது. மின்சார வாகனத் தொழில்நுட்பத்திற்கு விரைவாக மாறாவிட்டால், மீண்டும் வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படும்.

ஆய்வுத் துறையில் இந்தியாவின் முதலீடு 0.6 விழுக்காடாக இருப்பது கவலைக்குரியது. நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டங்களுக்காக ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் கோடிவரை செலவிடப்படுவது பணவீக்கத்தை அதிகரித்து, உள் கட்டமைப்பு முதலீடுகளைப் பாதிக்கும் என பெர்ன்ஸ்டைன் கூறியுள்ளது.

மூலதனமும் திறமையும் உள்ள இந்தியாவில், கடினமான முடிவுகளை எடுக்கும் துணிவே இப்போதைய தேவை என அக்கடிதம் வலியுறுத்துகிறது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாநரேந்திர மோடிபொருளியல்வளர்ச்சிஆய்வுசெயற்கை நுண்ணறிவுமொத்த உள்நாட்டு உற்பத்தி