ஜார்க்கண்டில் நோயாளியை ரயிலுக்கு அடியில் கொண்டு சென்ற அவலம்

1 mins read
சாலைகள் இதுவரை போடப்படவில்லை
46c22523-2342-47a6-9acb-ed9f002f77a5
நோயாளியின் உடல்நிலை மோசமடைந்ததால் அவரைச் சரக்கு ரயில்வண்டிக்கு அடியில் கொண்டு சென்றனர் குடும்பத்தார். - படங்கள்: இந்திய ஊடகம்

ஜார்க்கண்ட்: அதிர்ச்சி தரும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

நோயாளி ஒருவரின் குடும்பத்தார் மருத்துவமனைக்குச் செல்வதற்காகச் சரக்கு ரயில்வண்டி ஒன்றின் அடியில் தண்டவாளத்தைத் தாண்டிப் போவதாக அந்தக் காணொளி அமைந்துள்ளது.

Watch on YouTube

ஜார்க்கண்ட்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் எடுக்கப்பட்டது இந்தக் காணொளி.

நோயாளியின் நிலை மோசமடைந்த காரணத்தால் அவரின் குடும்ப உறுப்பினர்கள் அவசர மருத்துவ வண்டி 108ஐ தொடர்புகொண்டனர்.

இருப்பினும், நோயாளியின் வீட்டுக்குச் செல்வதற்குச் சாலை ஏதும் இல்லாத காரணத்தால் மருத்துவ வண்டியால் அங்கு போக முடியவில்லை. இந்தக் காரணத்தால் மருத்துவ வண்டி ஒரு கிலோமீட்டர் தொலைவிலேயே நின்றுவிட்டது.

நோயாளியை ஒரு படுக்கையில் வைத்து அவரின் குடும்பத்தார் மருத்துவ வண்டியை நோக்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே, ரயில் தண்டவாளம் ஒன்றைத் தாண்டும் நிலைமையும் ஏற்பட்டது. சரக்கு ரயில் அங்கு நின்றுகொண்டிருந்ததைக் கண்டு அது புறப்படும்வரை காத்திருக்க நினைத்தார்கள் நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள்.

ஆனால், நோயாளியின் நிலை மேலும் மோசமடைந்த காரணத்தால் ரயிலுக்கு அடியில் தண்டவாளத்தைத் தாண்டத் துணிந்தார்கள் அவர்கள்.

முதலில், நோயாளியின் படுக்கையைத் தண்டவாளத்தின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்குக் கொண்டு சென்ற பிறகு அனைவரும் அதே முறையில் தாண்டினர்.

அவர்கள் ஒருவழியாக மருத்துவ வண்டியை அடைந்ததை அடுத்து சம்பாவ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நோயாளி சேர்க்கப்பட்டார்.

ஜெய்ண்ட்கார் கிராமத்தில் இதுவரை சாலைகள் ஏதும் போடப்படாததால் இத்தகைய பிரச்சினைகளைப் பொதுமக்கள் சந்திக்க நேரிடுவதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்