தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நள்ளிரவில் குண்டுக்கட்டாக கைதான விவசாயிகள்; பஞ்சாப் எல்லையில் பதற்றம்

2 mins read
65170b40-e043-47d9-852d-f564d45a08b5
பஞ்சாப் எல்லையில் கூடுதல் எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. - படம்: ஊடகம்

சண்டிகர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் காரணமாக பஞ்சாப், ஹரியானா எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பதற்றம் நீடித்தது.

இந்நிலையில், பஞ்சாப் காவல்துறையினர் புதன்கிழமை (மார்ச் 19) மாலை திடீரென விவசாயிகள் திரளாகக்கூடி போராட்டம் நடத்திய இடத்துக்குச் சென்றனர்.

அங்கு போக்குவரத்துக்கு இடையூறாக விவசாயிகள் ஏற்படுத்தி இருந்த தடுப்பரண்களை அகற்றியதுடன், புல்டோசர்களைக் கொண்டு அவற்றை இடித்துத் தள்ளினர்.

இந்த நடவடிக்கையின் இறுதிக்கட்டமாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இதனால் கடும் ஆவேசமடைந்த விவசாயிகள் காவல்துறையுடன் ஒத்துழைக்க மறுத்ததால், பலர் அங்கிருந்து அகற்றப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், யாரையும் கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தவில்லை என பாட்டியாலா சிறப்புக் காவல் கண்காணிப்பாளர் நானக் சிங் தெரிவித்தார்.

எனினும், போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த நெடுஞ்சாலைகள் மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து, விவசாயிகள் அடுத்தக்கட்ட போராட்டத்துக்குத் தயாராகி வருகிறார்கள்.

காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முக்கியமான விவசாய சங்கத் தலைவர்களைக் குண்டுக்கட்டாக கைது செய்ததை ஏற்கவே இயலாது என கடுமையாகக் கண்டித்துள்ளார் விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத்.

பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டத்திற்குத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளதை அடுத்து பஞ்சாப், ஹரியானா எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

அங்கு கூடுதல் எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளின் பல்வேறு போராட்டங்களை மத்திய அரசுதான் தீர்க்க வேண்டும் என பஞ்சாப் அமைச்சர் ஹர்பால் சிங் கூறியுள்ளார்.

எனவே, விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுக்கு எதிராக டெல்லிக்குச் சென்று போராட வேண்டும் என்றும் பஞ்சாப் சாலைகளில் நின்று மறியலில் ஈடுபடக் கூடாது என்றும் ஆம் ஆத்மி அமைச்சரான அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்