தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெல்லியை நோக்கிய பேரணியை மீண்டும் தொடங்கிய விவசாயிகள்

1 mins read
c33966c6-5db9-4fef-a411-506e781ae619
டிசம்பர் மாதத்தில் ஏற்கெனவே இரண்டு முறை விவசாயிகளின் ‘டெல்லியை நோக்கிய பேரணி’ காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இருந்தும், அவர்கள் சனிக்கிழமை பிற்பகலில் மீண்டும் அணிவகுத்து டெல்லியை நோக்கிச் செல்கின்றனர். - படம்: ஊடகம்

சண்டிகர்: பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் மீண்டும் டெல்லியை நோக்கி, பேரணியைச் சனிக்கிழமை பிற்பகல் தொடங்கியுள்ளனர்.

இதனையடுத்து, ஹரியானா மாநில அரசு, அம்பாலா மாவட்டத்தின் 12 சிற்றூர்களுக்கு டிசம்பர் 17ஆம் தேதி வரை இணையச் சேவை மற்றும குறுந்தகவல் சேவைகளை முடக்கியுள்ளது.

முன்னதாக டிசம்பர் 6 மற்றும் 8ஆம் தேதி என இரண்டு முறை விவசாயிகள் டெல்லியை நோக்கிய பேரணியைத் தொடங்கினர். இருப்பினும், அவர்களை ஹரியானா காவல்துறை தடுத்து நிறுத்தியது. இப்போது மூன்றாவது முறையாகப் பேரணியைத் தொடங்கியுள்ளனர்.

இம்முறையும் டெல்லி நோக்கிச் செல்லும் விவசாயிகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் ஹரியானா எல்லையில் காவல்துறையினர் பல அடுக்குத் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

டெல்லி நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற பின்புதான் விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாகச் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று ஹரியானா காவல்துறையினர் ஏற்கெனவே விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதையும் மீறி, இப்போது மூன்றாவது முறையாக டெல்லியை நோக்கிய பேரணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

இதனிடையே, அப்பகுதியில் அமைதியைக் காக்கும் வகையில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக ஹரியானா மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார்.

விவசாயிகள் தங்களின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சம்யுக்தா கிஷான் மோர்ச்சா, கேஎம்எம் உள்ளிட்ட விவசாய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்