ஹைதராபாத்: பயணச்சீட்டுக் கட்டணம், மீதிச் சில்லறை வழங்குவது தொடர்பான வாக்குவாதத்தின்போது, ஓடும் பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநர் மரணமடைந்தார். இந்தச் சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்தது.
24 வயது குண்ட்லா பிரவளிகா என அடையாளம் காணப்பட்ட அப்பெண், தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 10 நாள்களாகச் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) இரவு உயிரிழந்தார்.
அக்டோபர் 25ஆம் தேதி, மிட்டகுடேம் கிராமத்துக்கு அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, அவர் பேருந்தின் பின்பக்கச் சக்கரங்களின் அடியில் விழுந்ததை அடுத்து படுகாயம் அடைந்தார்.
மௌனிகா எனும் பெண் பயணி, நடத்துநரிடம் 100 ரூபாய் கொடுத்துள்ளார். பிரவளிகாவிடம் அப்போது மீதிச் சில்லறை இல்லாததால், எஞ்சிய பணத்தைப் பின்னர் பெற்றுக்கொள்ளுமாறு அப்பயணியிடம் கேட்டுக்கொண்டார். இது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதமாக உருவெடுத்த நிலையில், ஆத்திரமடைந்த பயணி பிரவளிகாவை ஓடும் பேருந்திலிருந்து கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.
பிரவளிகாவைப் பேருந்திலிருந்து தள்ளிவிட்டதாகக் கூறப்படும் பெண்ணைத் தெலுங்கானா காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரவளிகாவின் மறைவுக்கு தெலுங்கானா முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டி ஆழ்ந்த இரங்கலையும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பெண் நடத்துநரின் மறைவைக் கண்டித்து தெலுங்கானா மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் புதன்கிழமை (நவம்பர் 4) அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
