நோயாளி போல் நடித்து பெண் மருத்துவர் சுட்டுக்கொலை

1 mins read
5dd3fef7-5b8a-435d-a04a-a4c07827624a
சுட்டுக் கொல்லப்பட்ட மருத்துவர் சுரபி ராஜ். - படம்: ஊடகம்

பாட்னா: நோயாளிகள் போல் பாசாங்கு செய்து தனியார் மருத்துவமனைக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த பெண் மருத்துவரை பட்டப்பகலில் சுட்டுக்கொன்ற சம்பவம் பீகாரில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து ஆறு பேர் கொண்ட அந்தக் கும்பலுக்கு அம்மாநில காவல்துறை வலைவீசியுள்ளது. நோயாளிகள் போல் நடித்ததால் அவர்கள் மீது யாருக்கும் சந்தேகம் எழவில்லை.

பீகார் தலைநகர், பாட்னாவின் ஆகம்குவான் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது.

கடந்த சனிக்கிழமை அந்தக் கும்பல் மருத்துவமனைக்கு வந்தபோது, அதன் இயக்குநரின் மனைவியான சுரபி ராஜ் அங்கிருந்தார்.

அவரும் ஒரு மருத்துவர் என்பதால், நோயாளிகளை அவர் சந்திக்கும் அறையில் பணியில் ஈடுபட்டிருந்தார். இதையறிந்த அந்த ஆறு பேரும் கும்பலாகச் சென்றனர்.

பின்னர் தங்களிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மருத்துவர் சுரபியை சரமாரியாகச் சுட்டு வீழ்த்தினர். ஆறு குண்டுகள் பாய்ந்ததால் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.

உடனடியாக பாட்னாவில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்தது.

பெண் மருத்துவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்