நிதி நெருக்கடி: அயோத்தி பள்ளிவாசல் கட்டுமான வடிவமைப்பில் மாற்றம்

நிதி நெருக்கடி: அயோத்தி பள்ளிவாசல் கட்டுமான வடிவமைப்பில் மாற்றம்

படம்: இந்து தமிழ் திசை

24 Oct 2026 - 6:30 pm

1 mins read

புதுடெல்லி: அயோத்தியில் கட்டப்பட உள்ள புதிய பள்ளிவாசலின் கட்டுமானப் பணிகள் கடும் நிதிப் பற்றாக்குறை காரணமாகப் பெரிய அளவில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

பள்ளிவாசலின் அளவு 3,500 சதுர அடியாகக் குறைக்கப்பட்டுள்ளதோடு, அதன் வடிவமைப்பிலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அயோத்தியின் அருகிலுள்ள தனீபூர் பகுதியில் புதிய பள்ளிவாசல் கட்டுவதற்காக ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்நிலத்தில் பிரம்மாண்ட பள்ளிவாசலுடன், மருத்துவமனை, நூலகம், சமூக உணவகம் ஆகியவற்றை உள்ளடக்கிய வளாகத்தைக் கட்ட இந்தோ-இஸ்லாமிக் கலாசார அறக்கட்டளை திட்டமிட்டிருந்தது.

எனினும், இத்திட்டத்திற்குத் தேவையான நிதி திரட்டுவதில் தொடர்ந்து சுணக்கம் நிலவி வருகிறது.

நிதிப்பற்றாக்குறை காரணமாகவே மசூதியின் அளவையும் வடிவமைப்பையும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அறக்கட்டளையின் தலைவர் ஜூஃபர் அகமது ஃபரூக்கி தெரிவித்துள்ளார்.

தொடக்கத்தில் அத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.300 கோடியாக இருந்தது என்றும் தற்போது திருத்தப்பட்ட வடிவமைப்பின்படி கட்டுமானச் செலவு ஏறக்குறைய ரூ.5 கோடியாகக் குறையும் என்று தெரிவித்தார்.

மேலும், தற்போது அறக்கட்டளையிடம் ரூ.15 லட்சம் மட்டுமே உள்ளது என்றும் மீதமுள்ள தொகையைத் திரட்ட விரைவில் புதிய நிதி திரட்டும் பிரசாரம் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

புதிய திட்டத்தின்படி, மசூதியின் உட்புறப் பரப்பு 3,500 சதுர அடியாகவும் ஒட்டுமொத்த வளாகத்தின் பரப்பளவு 15,000 சதுர அடியாகவும் இருக்கும்.

நிலப் பயன்பாட்டுச் சான்றிதழ் உத்தரப்பிரதேச அரசிடம் இருந்து கிடைத்தவுடன், திருத்தப்பட்ட வரைபடம் அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் அனுமதிக்குச் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்