ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

2 mins read
42d9e163-f4f5-4e1c-8973-b5c68090f272
தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த ஒருவரின் உடலைக் கொண்டுசெல்லும் மருத்துவப் பணியாளர்கள். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3

கட்டாக்: இந்தியாவின் ஒடிசா மாநிலம், கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் திங்கட்கிழமை (மார் 16) நேர்ந்த தீ விபத்தில் குறைந்தது 10 நோயாளிகள் மாண்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அந்தத் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாகத் தீப்பிடித்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

விபத்து நேர்ந்த இடத்தைப் பார்வையிட்ட ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, உயிரிழப்புகளை உறுதிப்படுத்தினார். தீவிர சிகிச்சைப் பிரிவினுள் ஏழு நோயாளிகளும் மீட்புப் பணியின்போது வேறு சிகிச்சைப் பிரிவுகளுக்கு மாற்றப்பட்ட மூன்று நோயாளிகளும் உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்களும் மருத்துவமனை ஊழியர்களும் விரைந்து செயல்பட்டுத் தீயைக் கட்டுப்படுத்தினர். இதற்கிடையே, அங்கிருந்த நோயாளிகள் பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வேறு சிகிச்சைப் பிரிவுகளுக்கு மாற்றப்பட்டனர்.

மீட்புப் பணியில் ஈடுபட்ட எஸ்சிபி மருத்துவமனையின் 23 ஊழியர்கள், புகையைச் சுவாசித்ததால் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மாஜி அறிவித்துள்ளார்.

மேலும், இச்சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள அவர், அதற்குப் பொறுப்பானவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

கட்டாக் மருத்துவமனையில் நேர்ந்த தீ விபத்தில் பலர் உயிரிழந்ததை அறிந்து கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்ததாகக் அதிபர் திரௌபதி முர்மு சமூக ஊடகம் வழியாகத் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தோரின் குடும்பத்தார்க்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்ட அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

விபத்துச் செய்தி தமக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடியும் எக்ஸ் ஊடகம் வழியாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், தீ விபத்தில் மாண்டோரின் குடும்பத்தினர்க்குத் தலா 2 லட்ச ரூபாயும் காயமடைந்த நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்களுக்குத் தலா 50,000 ரூபாயும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்