தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய மருத்துவமனையில் தீ; 10 சிசுக்கள் உயிரிழப்பு

2 mins read
மரண எண்ணிக்கை உயரக்கூடும் என அச்சம்
7b56f649-fed2-43df-b870-ce28f5dc8768
உத்தரப் பிரதேச மாநில மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீயில் பாதிக்கப்பட்ட மேலும் 16 குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. - படங்கள்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் உத்தரப் பிரதேச மா நில மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீயில் பச்சிளங்குழந்தைகள் பத்துப் பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 16 சிசுக்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது.

உள்ளூர் நேரப்படி நவம்பர் 15ஆம் தேதி இரவு 10.30 மணியளவில், ஜான்சியில் உள்ள மகாராணி லக்‌ஷ்மிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பராமரிக்கும் பிரிவில் தீ ஏற்பட்டது.

இச்சம்பவத்தில் பத்துக் குழந்தைகள் மாண்டுவிட்டதை மாநிலத் துணை முதல்வர் பிரஜேஷ் பதக் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார். ஏழு சிசுக்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் மற்ற மூன்று சிசுக்களின் அடையாளம் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

தீச்சம்பவம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தவறுகள் கண்டறியப்பட்டால் அவற்றுக்குக் காரணமானோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மின்கசிவால் தீ மூண்டதாகச் சந்தேகிக்கப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக இரங்கல் தெரிவித்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நிவாரணம், மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தீ மூண்ட வேளையில் 54 சிசுக்கள் மருத்துவமனையின் அந்தப் பிரிவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இச்சம்பவம் ஆழ்ந்த மனவருத்தம் அளிப்பதாக எக்ஸ் தளத்தில் இரங்கலைப் பதிவிட்டுள்ளார்.

இவ்வேளையில், உயிரிழந்த சிசுக்களின் குடும்பத்தார்க்கு ஐந்து லட்சம் ரூபாய் (S$7,960) இழப்பீடு வழங்க உத்தரப் பிரதேச முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்