தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஊரையே துடைத்தொழித்த வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு

2 mins read
1ab232d5-f5fc-4431-9210-c289b1c20b37
இதுவரை ஐந்து பேர் மாண்டுவிட்டனர் என்றும் 11 ராணுவ வீரர்களைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.  - படம்: ஏஎஃப்பி

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகள் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களின் நிலை என்னவானது எனத் தெரியவில்லை.

இதுவரை ஐந்து பேர் மாண்டுவிட்டனர் என்றும் 11 ராணுவ வீரர்களைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை என்றாலும் மீட்பு, நிவாரணப் பணிகளைத் தொடரப்போவதாக மீட்புப்படையினர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கேற்ப, இரவு முழுவதும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றதாகவும் மக்களை மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் மீட்புப் பணிகளை வழிநடத்தும் ராணுவ கர்னல் ஹர்ஷவர்தன் கூறியதாக இந்திய ராணுவத்தின் எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள உத்தராகண்ட் மாநிலத்தில் திடீர் வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டது. முன்னதாக அப்பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஓரிரு மணி நேரங்களில் பெருமழை கொட்டித்தீர்த்தது. இதுவே வெள்ளப்பெருக்கு ஏற்பட முக்கியக் காரணமானது.

அங்குள்ள புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றான தராலி கிராமத்தைச் சென்றடையப் போராட வேண்டியிருந்ததாகவும் அங்கிருந்து பின்னர் இந்துக்களின் புனிதத்தலமாகக் கருதப்படும் கங்கோத்ரியைச் சென்றடைந்ததாகவும் ராணுவத்தினரும் மீட்புப் படையினரும் தெரிவித்தனர்.

நிலச்சரிவால் அப்பகுதியில் உள்ள முக்கியமான நெடுஞ்சாலை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கனமழை நீடித்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பதினொரு ராணுவ வீரர்கள் காணாமல் போனது உறுதிசெய்யப்பட்டது. அவர்களைத் தேடும் பணியில் பயிற்சி பெற்ற நாய்கள், அகழ்பொறிகள், ஆளில்லா வானூர்திகள் உள்ளிட்ட நவீன கருவிகள் பயன்படுத்தப்படுவதாகவும் இந்திய ராணுவத்தின் எக்ஸ் தளப் பதிவு தெரிவிக்கிறது.

மலையிலிருந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, கிராமத்திற்குள் புகுந்து, வீடுகளையும் சாலைகளையும் அடித்துச் சென்றதை தொலைக்காட்சிச் செய்தி ஒளிவழிகள் காட்டின. மக்கள் உயிருக்குப் பயந்து ஓட்டமெடுத்ததாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கூறினர்.

நிலச்சரிவு ஏற்பட்டபோது வெள்ளநீரும் மண்ணும் பொங்கி வந்து தராலி பகுதியை மொத்தமாக துடைத்தொழித்துப் புதைப்பது போன்று காட்சி அளித்ததாகவும் அம்மக்கள் பீதியுடன் தெரிவித்தனர்.

இந்தப் பேரிடர் தொடர்பான காணொளிகள், புகைப்படங்களை மாநில முதல்வர் அலுவலகம் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்