லக்னோ: வீட்டுக்குள் புகுந்த வெள்ளநீரை, கங்கை நதியின் புண்ணிய நீராகக் கருதி வழிபட்ட காவல் உதவி ஆய்வாளர் தொடர்பான காணொளியும் செய்தியும் இணையத்தின் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
உத்தரப் பிரதேச மாவட்டம், பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரதீப் நிஷாத். அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக கங்கை, யமுனை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் சந்திரதீப் நிஷாத் வீட்டுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்தது. ஆனால், மற்றவர்களைப் போல் அவர் பதற்றமடையவில்லை. மாறாக, வெள்ளநீரை கங்கை அன்னை எனக் கூறிய அவர், பூசை செய்து வரவேற்றார்.
அவரது வீடு வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தாராகஞ்ச் பகுதியில் உள்ளது. தன் வீட்டின் முன் வெறுங்கால்களுடன், கால்சட்டையை மடித்து வழிபடுவதும், ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்து அதை வெள்ளநீரில் ஊற்றி, பூக்களையும் தூவி கங்கைக்கு மரியாதை செலுத்தும் காட்சியும் அடங்கிய காணொளி இணையத்தில் காணக்கிடைக்கிறது.
“கங்கை அன்னைக்கு ஜே” எனக் குரல் கொடுத்த சந்திரதீப் நிஷாத், தன்னை ஆசீர்வதிக்க கங்கை அன்னை தன் வீட்டுக்கே வந்திருப்பது தனக்குக் கிடைத்த பாக்கியம் என்று கூறினார்.
பிரயாக்ராஜில் தொடர்ந்து கனமழை நீடித்து வருவதால், வெள்ளப்பெருக்கும் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.