டேராடூன்: பொறியியல் பட்டம் இல்லாத ஒருவர், தமது 13 ஆண்டுகாலத் தொடர் முயற்சியாலும் இணையம்வழி பல நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டும் பறக்கும் கார் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
முழுக்க மின்சாரத்தில் இயங்கும் அந்த காரை உருவாக்கிய இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில் உள்ள கஃப்லிகான் கிராமத்தில் வளர்ந்த ரவி தம்டா என்பவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
கலைப் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றுள்ள ரவி தம்டா, தமது மலைக்கிராம மக்கள் அவசர மருத்துவத் தேவைகளுக்கும் போக்குவரத்துக்கும் அல்லல்படுவதைக் கண்டு வேதனையடைந்தார்.
அதையடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு அவரது மனத்தில் பறக்கும் கார் உருவாக்கும் கனவு சிறகடிக்கத் தொடங்கியது.
‘ஹபிடா ஸ்கைனெக்ஸ்’ (HAPIDA SKYNeX) எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஒற்றை இருக்கை வாகனம், செங்குத்தாக மேலெழுந்துத் தரையிறங்கும் நவீன தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.
ஆளில்லா வானூர்திகள் (டிரோன்) போலவே, பல மின்சார மோட்டார்கள், சுழல் உந்திகள் (புரெப்பல்லர்) மூலம் இயங்கும் அந்தப் பறக்கும் கார், வழக்கமான எரிபொருள்களுக்குப் பதிலாக மின்கலன் ஆற்றலை மட்டுமே பயன்படுத்துகிறது. அதன் வெற்றிகரமான சோதனையோட்டம் ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடைந்தது.
இதற்கு முன்பு கைப்பேசி மின்னூட்டியால் இயங்கும் காலணிகள், பார்வையற்றோருக்கான திறன் கைத்தடி, மூங்கில் பிளக்கும் இயந்திரம் எனப் பல்வேறு பயன்பாட்டுப் பொருள்களை ரவி தம்டா கண்டுபிடித்துள்ளார்.
அவரது பறக்கும் காருக்கு இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககத்தின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை.
