உணவு எச்சரிக்கை குறிப்புக் காலக்கெடு: அரசுக்குக் கடும் கண்டனம்

உணவு எச்சரிக்கை குறிப்புக் காலக்கெடு: அரசுக்குக் கடும் கண்டனம்

படம்: ராய்ட்டர்ஸ்

28 Sep 2026 - 7:42 pm

2 mins read

புதுடெல்லி: பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருள்களில் கலந்துள்ள உப்பு, கொழுப்பு, சர்க்கரை பற்றி எச்சரிக்கைக் குறிப்புகளை ஒட்ட வேண்டும் என்ற கடுமையான விதிமுறையை இந்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஆனால், பொட்டலங்களின் முன்பக்கத்தில் ஒட்டப்படும் குறிப்புகளுக்கு அரசாங்கம் கடுமையான விதிகளை அமல்படுத்தவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்ததால், அதனை மறுஆய்வு செய்த நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருள்களில் எச்சரிக்கை ஒட்டுவில்லைகளை கொண்டுவருவதற்குமுன் பொதுமக்கள், தொழில்துறையினரிடம் மீண்டும் கருத்துகளைக் கேட்க அரசு ஏன் இவ்வளவு நேரத்தை வீணடிக்க விரும்புகிறது என்று உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 28) கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் அரசாங்கம் வேகமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் அழுத்தம் கொடுத்து வருகிறது.

முன்னெப்போதும் இல்லாத உணவுப் பாதுகாப்பு நடவடிக்கையாக, சுகாதாரக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இந்தியா முழுவதும் பல உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் சோதனைகள் நடத்தப்பட்டு அவை மூடப்பட்டுள்ளன.

$100 பில்லியன் மதிப்புள்ள தொழில்துறையின் பல ஆண்டு தீவிர முயற்சிக்குப் பிறகு, உப்பு, சர்க்கரை, கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள் குறித்து பயனீட்டாளர்க்குத் தெரிவிக்கும் நோக்கில், பொட்டலமிடப்பட்ட பொருள்களின்மீது சிவப்பு அறுகோண வடிவக் குறிப்புகளைக் கட்டாயமாக்கும் கடுமையான விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

“நாங்கள் சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து கவலைப்படும்போது நீங்கள் ஏன் இவ்வளவு நேரத்தை வீணடிக்க விரும்புகிறீர்கள்,” என்று விசாரணையின்போது உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே. பி. பார்திவாலா கேள்வி எழுப்பினார்.

“அதிகாரிகள் எங்கள் உத்தரவை ஏற்றுக்கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்களை ஏமாற்றமடையச் செய்யாதீர்கள். இவ்விவகாரத்தில் விரைவில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்,” என்று நீதிமன்றம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்