வாக்காளர் பட்டியலில் மீண்டும் இணையப் படிவம் 6ஐச் சமர்ப்பிக்கலாம்: இந்தியத் தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியலில் மீண்டும் இணையப் படிவம் 6ஐச் சமர்ப்பிக்கலாம்: இந்தியத் தேர்தல் ஆணையம்

படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

04 Nov 2026 - 2:44 pm

1 mins read

புதுடெல்லி: வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்ட வாக்காளர்கள், இறுதிப் பட்டியலில் இடம்பெறப் படிவம் 6ஐத் தாக்கல் செய்யலாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) தெரிவித்துள்ளது.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் ஆணையம் இதனை அறிவுறுத்தியது.

சிறப்புத் தீவிரத் திருத்தத்தின்போது வரைவுப் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்ட சிலர், படிவம் 6ஐச் சமர்ப்பிக்கத் தயங்குவதாக ஆணையத்தின் கவனத்திற்கு வந்தது.

அப்படிவத்தில், முதன்முறையாகப் பெயர் சேர்க்கப்படுவதாக உறுதிமொழி அளிக்க வேண்டும் என்ற விதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனால், முன்னரே வாக்காளர் பட்டியலில் பெயரைப் பதிவு செய்தவர்கள் பொய்யான தகவல் அளித்ததாகக் கருதப்பட்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 31ன்கீழ் வழக்கையும் தண்டனையையும் எதிர்நோக்க நேரிடும் என எண்ணுகின்றனர்.

அதனை மறுத்த ஆணையம், வரைவுப் பட்டியலில் பெயரில்லாதவர்கள் மீண்டும் பெயர் சேர்க்க விண்ணப்பிப்பது பொய்யான உறுதிமொழி ஆகாது என விளக்கியது.

மேலும், வாக்காளர்களின் இந்த அச்சம் தவறானது என டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி தீர்ப்பளித்ததையும் ஆணையம் சுட்டிக்காட்டியது.

எனவே, வேறு எந்தத் தொகுதியிலும் பெயர் பதிவாகாமல் இருக்கும் பட்சத்தில், படிவம் 6ஐச் சமர்ப்பித்த வாக்காளர்கள்மீது தேர்தல் பதிவு அதிகாரிகள் குற்றவியல் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என அது அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்