சென்னை: செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை (ஏஐ) மாணவர்களிடம் நன்முறையில் அறிமுகப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், ‘ஏஐ’ தொழில்நுட்பம் சார்ந்த அறிவை மேம்படுத்தும் விதமாக, மத்திய கல்வி அமைச்சு ஐந்து புதிய பாடங்களை உருவாக்கி உள்ளது. இந்தப் பாடங்கள் இணையம்வழி இலவசமாக வழங்கப்படுகிறது.
தொடர்ந்து அறிமுகமாகி வரும் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதற்காக இந்திய சுதந்திர தினத்தையொட்டி இணையத்தில் ஐந்து இலவசப் பாடங்களை வெளியிட்டுள்ளோம் என்றும் மத்திய கல்வி அமைச்சு கூறியது.
இந்தியாவின் ஆகத்தரமான கல்வி நிலையங்களில் ஒன்றான ‘ஐஐடி’யின் பேராசிரியர்கள் இப்பாடங்களை உருவாக்கியுள்ளனர்.
கணினி பொறியியல், தரவு அறிவியல், கிரிக்கெட் கணக்கியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பிரிவுகளில் பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவின் அடிப்படை, பைத்தன் நிரலாக்கம், தரவுக் காட்சிப்படுத்தல், இயந்திரக் கற்றல் ஆகியவற்றின் வாயிலாக இப்பாடங்கள் கற்பிக்கப்படும்.
வணிகவியல், மேலாண்மைப் பின்னணி உள்ள மாணவர்களுக்கு கணக்கியல், தானியக்கம், திறன்பகுப்பாய்வு போன்றவை செயற்கை நுண்ணறிவு வாயிலாகக் கற்பிக்கப்படுகிறது.
ஒவ்வொரு பாடமும் 25 முதல் 45 மணி நேரம் கொண்ட காணொளிகளாகக் கிடைக்கும். கல்வி அமைச்சின் அதிகாரத்துவ இணையத்தளத்தளமான ‘ஸ்வயம் பிளஸ்’ (Swayam-plusswayam2.ac.in) இணையத்தில் மாணவர்கள் தங்கள் பெயரைப் பதிவுசெய்தால் இப்பாடங்களைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இவற்றுள் இரண்டு பாடங்களில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும்.
ஸ்வயம் இணையத்தளம் பள்ளி முதல் முதுநிலைப் பட்ட மாணவர்கள் வரை அனைவருக்கும் இணையவழிக் கற்றல் வாய்ப்புகளை வழங்குகிறது என்றும் அது அனைவருக்கும் உயர்தர கல்விக்கான அணுகலை உறுதிசெய்கிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“பல்வேறு தொழில்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், தொழில்நுட்பம், புதுமை, ஆராய்ச்சி ஆகியவற்றில் எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான அறிவு, திறன்களுடன் மாணவர்களைத் தயார்படுத்த ஏதுவாக ஏஐ பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன,” என்றும் கல்வி அமைச்சின் இணையத்தளம் கூறுகிறது.