புதுடெல்லி: எதிர்வரும் டிசம்பர் மாதம் அமெரிக்காவின் ஃபுளோரிடா பகுதியில் நடைபெறவுள்ள ‘ஜி20’ உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைப் பிரதமர் மோடி நேரில் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள வர்த்தகக் கட்டுப்பாடுகள், வரிகள் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது தொடர்பாக எழுந்துள்ள சவால்கள் குறித்து இரு தலைவர்களும் முக்கியமான ஆலோசனை நடத்துவர் எனத் தெரிகிறது.
இதுகுறித்து இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் கூறுகையில், “ஜி20 மாநாட்டின்போது அதிபர் டிரம்ப் சந்திக்கவிருக்கும் மிக முக்கியமான உலகத் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர்,” என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடங்கிய ‘குவாட்’ (Quad) தலைவர்களின் உச்ச நிலை மாநாட்டுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அம்மாநாடு முடிந்ததும் பிரதமர் மோடி கனடாவுக்குப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டுப் பிரதமர் மார்க் கார்னியைச் சந்திக்கக் கூடும் என்றும் அரசத்தந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியப் பிரதமரின் பயணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
