புதுடெல்லி: ஆண்டின் தொடக்கத்தில் இருந்த உச்சக்கட்ட விலையோடு ஒப்பிடுகையில், தங்கத்தின் விலை 37 விழுக்காடுவரை சரியக்கூடும் என்று உலகத் தங்கம் மன்றம் தெரிவித்துள்ளது.
தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு 3,857 அமெரிக்க டாலருக்கும் கீழே குறைந்தால், அது மேலும் குறையலாம் என்று மன்றம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
அதேவேளையில், ஜப்பானிய யென் நாணயம் வலுவடைந்தால் அது தங்கத்தின் விலைச் சரிவை சற்றே மட்டுப்படுத்தக்கூடும். தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் கிட்டத்தட்ட 4,063.80 டாலராக உள்ளது.
லண்டன் புல்லியன் சந்தை சங்கத்தின் பிற்பகல் வணிகத்தில், தங்கத்தின் விலை ஒரு விழுக்காடு சரிந்து 4,027 டாலராகப் பதிவானது. இதன்மூலம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஏற்பட்ட மொத்தச் சரிவு 7.8 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றங்கள் ஏதும் செய்யாத நிலையில், வட்டி விகித எதிர்பார்ப்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதல் போக்கு காரணமாக கச்சா எண்ணெய் விலை, பணவீக்கம் குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன.
முதலீட்டாளர்கள் தங்களது நிலைப்பாட்டை மறுமதிப்பீடு செய்து வருவதால், தங்கம் சார்ந்த இடிஎஃப் முதலீடுகளும் குறைந்துள்ளன. ஒரு அவுன்ஸ் தங்கம் 3,943 டாலருக்குக் கீழே சென்றால், அதன் அடுத்தகட்ட வீழ்ச்சி 3,857 முதல் 3,887 டாலர்வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


