புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சு தமிழ்நாட்டிற்கு ரூ. 522 கோடி பேரிடர் நிவாரண நிதியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
சென்ற ஆண்டு (2024) கனமழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் சனிக்கிழமை (ஏப்ரல் 5) உயர்நிலைக் குழுவினரின் கூட்டம் நடைபெற்றது.
அதில் கனமழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களால் பாதிக்கப்பட்ட தமிழகம், புதுச்சேரி, இமாச்சலப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களுக்கு மொத்தம் ரூ. 1,280.35 கோடி நிவாரண நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்கீழ், பீகாருக்கு ரூ. 588.73 கோடி, தமிழ்நாட்டிற்கு ரூ. 522.34 கோடி, இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.136.22 கோடி, புதுச்சேரிக்கு ரூ.33.06 கோடி நிதி வழங்க மத்திய அரசு இணங்கியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் (2024-25) இதுவரை மாநிலப் பேரிடர் நிவாரண நிதியாக 28 மாநிலங்களுக்கு மொத்தம் 20,264.40 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.