அரசுப் பள்ளிகள் மூடல்: உத்தராகண்ட் அரசுக்கு சிஜேபி பத்து நாள் கெடு

அரசுப் பள்ளிகள் மூடல்: உத்தராகண்ட் அரசுக்கு சிஜேபி பத்து நாள் கெடு

கோப்புப் படம்: என்டிடிவி

21 Sep 2026 - 6:45 pm

1 mins read

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 826 அரசு தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கரப்பான் பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி), அம்மாநில அரசுக்கு பத்து நாள்கள் கெடு விதித்துள்ளது.

மேலும், ‘பள்ளிகளைச் சீரமைப்போம்’ என்ற பிரசாரத்தையும் அக்கட்சி தீவிரப்படுத்தி உள்ளது.

மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையிலும், அடிப்படை வசதிகள் இன்றி நூற்றுக்கணக்கான பள்ளிகள் தவித்து வருவதாக சிஜேபியின் வடமண்டல ஒருங்கிணைப்பாளர் ஸ்ரேஷ்டா சிங் கூறியுள்ளார். குறிப்பாக, மலைப்பகுதிகளில் உள்ள 270 பள்ளிகளில் குடிநீர் வசதிகூட இல்லை என அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

அரசு, தனியார் பள்ளிகளுக்கு இடையேயான கட்டமைப்பு இடைவெளியைச் சுட்டிக்காட்டிய சிஜேபி, மூடப்பட்ட பள்ளிகளின் விவரங்கள், ஆசிரியர் எண்ணிக்கை, மாணவர்ச் சேர்க்கை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மேலும், காலிப் பணியிடங்களை நிரப்பவும் குடிநீர், கழிவறை, மின்சாரம், போக்குவரத்து வசதிகளைச் சீரமைக்கவும் மாவட்ட வாரியாகக் காலக்கெடுவுடன் கூடிய திட்டத்தை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசு பத்து நாள்களுக்குள் தெளிவான அறிக்கை வெளியிடாவிட்டால், கல்வி அமைச்சர் தன் சிங் ரவாத் பதவி விலக வேண்டும் எனக் கூறி அக்டோபர் 2ஆம் தேதிக்குப் பிறகு அமைதியான முறையில் மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கைக்கு உத்தராகண்ட் மாநிலக் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்