குல்காமில் சிஆர்பிஎஃப் வீரர்கள்மீது துப்பாக்கிச்சூடு; மூவர் காயம்

குல்காமில் சிஆர்பிஎஃப் வீரர்கள்மீது துப்பாக்கிச்சூடு; மூவர் காயம்

படம்: பிடிஐ

11 Nov 2026 - 7:47 pm

1 mins read

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் புதன்கிழமை (நவம்பர் 11) மத்திய ரிசர்வ் காவல் படையின் (சிஆர்பிஎஃப்) சோதனைச்சாவடிமீது பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படுவோர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, அரசு பட்டப்படிப்புக் கல்லூரியில் நடைபெறும் வேஷோ விழாவில் கலந்துகொள்வதற்காக குல்காம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.

புதன்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் 46வது சிஆர்பிஎஃப் படையைச் சேர்ந்த மத்தியக் காவல்துறை வீரர்கள்மீது தாக்குதல்தாரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

தாக்குதல் நடத்திய குற்றவாளிகளைப் பிடிப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என்றும் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் சிஆர்பிஎஃப் அதிகாரி ஒருவர் கூறினார்.

தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியைப் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அதனைத் தொடர்ந்து, அந்த வட்டாரத்தில் தீவிர தேடுதல், மீட்பு நடவடிக்கை உடனடியாகத் தொடங்கப்பட்டது.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ‘அவெஞ்சர்’ வகை மோட்டார்சைக்கிளைக் காவல்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.

குல்காம் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் இரு வெளிமாநில ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு அங்கு நடந்த முதல் தாக்குதல் இது எனத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்