500 மில்லியன் அரிய ஆவணங்களை மின்னிலக்க வடிவமாக்கும் ‘ஞான பாரதம் திட்டம்’

2 mins read
2aab1ad1-68bb-4f6b-b8b5-6ada4979efc0
ஒரு லட்சிய தேசிய முயற்சியாகத் தொடங்கப்பட்ட ‘ஞான பாரதம் திட்டம்’ முழுமையடைய, குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் பண்டைய அறிவுச் செல்வங்களைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, நாடு முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 500 மில்லியனுக்கும் (50 கோடி) மேற்பட்ட ஆவணங்களை மின்னிலக்க வடிவத்துக்கு மாற்ற இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் மூலம் ஓலைச்சுவடிகள் முதல் கையெழுத்துப் பிரதி வரையிலான அனைத்தும் மின்னிலக்க வடிவமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, மத்திய கலாசார அமைச்சு ‘ஞான பாரதம் திட்டம்’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் கைப்பேசி செயலி (App), இணையத்தளம் ஆகியவை உருவாக்கப்படுகின்றன. அவற்றின் மூலம் பொதுமக்கள் அரிய ஆவணங்களின் மின்னிலக்க வடிவங்களைப் பொதுமக்கள் அணுகலாம்.

வரலாற்று ஆசிரியர்கள், ஆர்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பல நூற்றாண்டுகால கையெழுத்துப் பிரதிகளை நேரடியாகத் தங்கள் திறன்பேசி மூலம் அணுக முடியும்.

மேலும், ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ் (IOS) இயங்குதளங்களில் இயங்கும் ‘ஞான பாரதம்’ செயலியில் ஊடாடும் பயிற்சிகள் (interactive tutorials), நிகழ்நேர ஆவண மொழிபெயர்ப்பு, மேம்பட்ட தேடுதல் வசதி ஆகியவையும் உள்ளன.

மேலும், கைப்பேசி செயலியைப் பயன்படுத்தும்போது, மின்னிலக்க ‘பிடிஎஃப்’ (PDF) உள்ளடக்கத்திற்கான அணுகல் வழங்கப்படும் என்று கலாசார அமைச்சின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

மற்றக் கருவிகளுக்கும் அனுமதி அளிக்கும் வகையில், அவற்றின் மூலம் பெறக்கூடிய அணுகலை எளிதாக்க இணையத்தளம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் பரந்த, பல்வேறு வகையான கையெழுத்துப் பிரதி பாரம்பரியத்தை மின்னிலக்கமயமாக்குவதும் பாதுகாப்பதும் அவசியம் என்று துறைசார் நிபுணர்கள் குறிப்பிட்டனர்.

பனை ஓலைகள், பிர்ச் மரப்பட்டை, காகிதம், துணி ஆகியவற்றில் எழுதப்பட்ட 50 கோடி அரிய ஆவணங்களை மின்னிலக்கமயமாக்கும் பணியைக் கலாசார அமைச்சு ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, அரபு, பாரசீகம், மலையாளம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும் உள்ள கையெழுத்துப் பிரதிகள் மின்னிலக்கமாக்கப்பட உள்ளன.

இவை தற்போது பல்வேறு மாநிலங்களில் உள்ள நூலகங்கள், காப்பகங்கள், தனிப்பட்ட சேகரிப்புகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தேசிய முயற்சியாகத் தொடங்கப்பட்ட ‘ஞான பாரதம் திட்டம்’ முழுமையடைய, குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

“மிக நுணுக்கமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். பல அரிய ஆவணங்கள் பேரளவு சேதமடைந்து, உடையக்கூடிய நிலையில் உள்ளன. பலவற்றில் கறைகள், பூச்சியால் ஏற்பட்ட சேதங்கள், மைச்சிதறல்கள் போன்றவை உள்ளன,” எனத் திட்டப்பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்