வாஷிங்டன்: அமெரிக்காவில் தங்கியிருக்கும் குடிமக்கள் அல்லாத அனைவரும் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை அரசாங்கத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எச்-1பி விசாவில் பணியாற்றுபவர்கள், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தங்கள் முகவரியை மாற்றுபவர்கள் 10 நாள்களுக்குள் அது குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தும் புதிய விதிமுறை ஏப்ரல் 11ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
சட்டவிரோத குடியேறிகள் அரசாங்கத்தில் பதிவு செய்ததற்கான ஆவணங்களை தங்களுடன் எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்றும் இல்லையெனில் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் இந்தப் புதிய விதி கூறுகிறது.
எனவே, பதிவுச் சான்றிதழை வெளியே செல்லும்போது கையோடு எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். இது சர்ச்சைக்குரிய விதி என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்தப் புதிய விதியை அமல்படுத்த அதிபர் டிரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.
24 மணி நேரமும் அடையாள ஆவணங்களுடன் வெளியே சென்று வருவது சாத்தியமற்றது என ஒரு தரப்பு எதிர்த்தாலும், ‘படையெடுப்பிலிருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாத்தல்’ என்ற அதிபர் டிரம்பின் நிர்வாக உத்தரவின் ஒரு பகுதியான இந்த விதி ஏப்ரல் 11 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.
அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேறிகள் அனைவரும் நாடு கடத்தப்படுவர் என அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து, பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்கா செல்பவர்களும், ஏற்கெனவே பல்வேறு விசாக்களில் அங்கு சென்றவர்களும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
ஏப்ரல் 11ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு அமெரிக்காவிற்கு வருபவர்கள் வந்த 30 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். இதற்கு இணங்கத் தவறினால் அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு (DHS) அரசு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இணங்காததற்கு எந்தப் புகலிடமும் இருக்காது,” என்று அதன் செயலாளர் கிறிஸ்டி நோயம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சுமார் 5.4 மில்லியன் இந்தியர்கள் உள்ளனர்.